அடில் ரஷித், இந்தியாவுக்கு எதிரான வெள்ளைப் பந்துத் தொடர்களிலிருந்து விலகல்.

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட், ஜூலை 1 அன்று தொடங்குகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான வெள்ளைப் பந்துத் தொடர்களிலிருந்து அடில் ரஷித் விலகியுள்ளார். காரணம் ஹஜ் பயணம்.

இஸ்லாமியர்களின் புனிதத் தலம் மெக்கா. சவுதி அரேபியாவில் உள்ளது. வசதியும் வாய்ப்பும் இருந்தால் வாழ்வில் ஒரு முறையேனும் மெக்காவுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ள இஸ்லாமியர்கள் விரும்புவார்கள். இதனை ஹஜ் பயணம் என்பார்கள்.

கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ஹஜ் புனித யாத்திரை நடைபெறவில்லை. இந்த வருடம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளார் அடில் ரஷித். அவர் மெக்கா செல்ல இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.

இதனால் ஜூலை 7-ல் தொடங்கி 17-ல் முடியும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான வெள்ளைப் பந்துத் தொடர்களில் அடில் ரஷித் பங்கேற்க மாட்டார்.

அடில் ரஷித் விலகியுள்ளதால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் 25 வயது லெக் ஸ்பின்னர் மேட் பார்கின்சன் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.