இலங்கைக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி.

இந்தியா – இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இலங்கை அணியில் தொடக்க வீராங்கனைகள் விஷ்மி குணரத்னே, கேப்டன் சமாரி அட்டப்பட்டு நல்ல தொடக்கம் தந்தனர். ஸ்கோர் 87 ரன்னாக இருந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. சமாரி அட்டப்பட்டு 43 ரன்னிலும், விஷ்மி குணரத்னே 45 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

அதன் பின்னர் வந்த வீராங்கனைகளில் ஒருவர் கூட ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. 20 ஓவர்களில் இலங்கை 7 விக்கெட்டுக்கு 125 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்மிர்தி மந்தனா 39 ரன்கள் எடுத்தார். பந்தை பவுண்டரிக்கு விரட்டி வெற்றி இலக்கை கடக்க உதவிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 31 ரன்களுடன் களத்தில் இருந்ததுடன் ஆட்டநாயகி விருதையும் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. கடைசி ஆட்டம் நாளை நடக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.