சமகால கிரிக்கெட்டின் “கிங்” என்பதை மீண்டும் நிரூபித்த இங்கிலாந்து அணி.

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேரியல் மிட்செல் 109 ரன்களும், டாம் பிலண்டல் 55 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி ஜானி பாரிஸ்டோ (162) மற்றும் ஓவர்டன் (97) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 360 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய நியூசிலாந்து அணி 326 ரன்களுக்கு ஆல் அவுட்டானதன் மூலம், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 295 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஓலி போப் 82 ரன்களும், ஜோ ரூட் 86* ரன்களும், ஜானி பாரிஸ்டோ 71* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், மிக இலகுவாக இலக்கை எட்டிய இங்கிலாந்து அணி, மூன்றாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, மூன்று போட்டிகள் கொண்ட தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் சாம்பியனான நியூசிலாந்து அணியை அசால்டாக வீழ்த்தி, தொடரையும் முழுமையாக வென்ற இங்கிலாந்து அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் இங்கிலாந்து அணியின் மிரட்டல் வெற்றியை வியந்து பாராட்டி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.