தமிழகம் முழுவதும் பாஜக இன்று உண்ணாவிரத போராட்டம்

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும், அதை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

சென்னையில் 7 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த பாஜக திட்டமிட்டு இருந்தது. வடசென்னை மாவட்டத்தில் கொளத்தூர் தொகுதியில் உண்ணாவிரதம் இருக்க பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு இருந்தார். ஆனால் அங்கு உண்ணாவிரத போராட்டம் நடத்த போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

போக்குவரத்து பிரச்சினை காரணமாக வடசென்னை மேற்கு, தெற்கு, வடகிழக்கு, மத்திய சென்னை கிழக்கு, மேற்கு, தென் சென்னை, தென் சென்னை கிழக்கு ஆகிய 7 மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் போராட்டத்தை நடத்தும்படி போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இதற்கு பாஜக தரப்பில் ஒப்புதல் வழங்கப்பட்டதை தொடர்ந்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் இருக்க போலீஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று பாஜக அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறும் போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொள்கிறார். கோவையில், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோரும், திருச்சி கன்டோன்மென்ட் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெறும் போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் கலந்துகொள்ள உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.