பிரதமர் பதவிக்குச் சுமந்திரனுக்கு அழைப்பு வந்திருந்தால் சந்தோஷம் ஏனெனில் அவர் எனது மாணவர்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பியைப் பிரதமராகப் பதவியேற்க அழைப்பு வந்தது என்றால் உண்மையிலேயே நான் சந்தோஷம் அடைவேன். ஏனென்றால் அவர் என்னுடைய மாணவர். பல வருட காலமாகத் தெரிந்தவர் என்ற வகையில் அதற்கு நான் எதிர்ப்பு அல்லன்.”

இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமல்லாத வகையில் சுமந்திரனைப் பிரதமராக நியமிக்கலாம் என்று அணுகிய நிலையில் அதை அனைத்துக் கட்சிகளும் இணைந்து அழைத்தால் தான் அந்தப் பதவியை ஏற்க முடியும் எனச் சுமந்திரன் கருத்துத் தெரிவித்திருந்தார். இதைச் சுமந்திரனுக்குத் தெரிந்த ஒருவர் என்னிடம் கூறினார்.

இது பற்றி இணையவழிக் கலந்துரையாடலில் கூறியதன் காரணமாக இன்று அது பரகசியமாகியுள்ளது. ஆனால், சில விடயங்களை மனதில் வைத்திருக்க வேண்டும். சுமந்திரன் தன்னுடைய கட்சியினுடைய ஏகோபித்த விருப்பத்திலா அல்லது தன்னுடைய தனிப்பட்ட விருப்பத்திலா பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வது என்பது ஒரு கேள்வி.

இரண்டாவது கேள்வி, தமிழர்கள் அமைச்சுப் பதவியை ஏற்றதன் பிற்பாடு அவர்கள் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தால், தாங்கள் என்ன காரணத்துக்காக நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டார்கள் என்பதை மறக்க வேண்டிய நிலை ஏற்படும்.

காரணம் எந்த நேரமும் மத்திய அரசுடன் இணைந்து வேலையைச் செய்யும்போது மத்திய அரசினுடைய விருப்புத் தாக்கம் செலுத்துவதால் தமிழ் மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்படுவர் என்பதை மறந்துவிடக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

நான் நினைக்கின்றேன் எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஏற்றதன் பின்னர் அமிர்தலிங்கத்தின் வாழ்வில் பல முரண்பாடுகள் ஏற்பட்டன. சம்பந்தனும் அதேபோலவே.

சுமந்திரன் இவ்வாறு பிரதமர் பதவி ஏற்றுக்கொள்வதானால் தமிழ்க் கட்சிகள் அனைத்தினதும் ஏகோபித்த விருப்பைப் பெற்றுக்கொண்டால் நல்லது என நினைக்கின்றேன்.

தற்போதுள்ள சூழலில் ஜனாதிபதி பதவி விலகினால் பிரதமரும், பிரதமர் செயலிழந்து போனால் – அவருக்கு முடியாதுபோனால் ஒரு மாத காலத்துக்குச் சபாநாயகரும் பதில் ஜனாதிபதி பதவியை ஏற்க உரித்திருக்கின்றது. ஆகவே, ஜனாதிபதிக்குப் பதிலாகப் பிரதமரும் பிரதமருக்குப் பதிலாக சபாநாயகருமென அந்த மூன்று பேருக்குமே அந்த உரித்துக் காணப்படுகின்றது.

புதியவர்கள், புதிய முகங்கள் என்பதற்காக நாங்கள் சர்வகட்சி அரசு அமைக்கப் போகின்றோம் என மக்கள் முன் வந்தால் அதனால் எந்தப் பயனும் கிடையாது.

எதிர்க்கட்சிகள் இணைந்து அரசு அமைப்பது என்பதை விட எங்களிடம் என்ன கொள்கைகள், என்ன மாதிரியான விடயங்களை முன்வைத்து நாம் அரசை அமைக்கப் போகின்றோம் என்பதே முக்கியம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.