ரணிலும் பதவி விலகும் நிலையை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்!

சுமார் முப்பது வருட காலமாக அதிகாரப் பேராசைக்காகக் காத்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

கொழும்பு – காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுடன் இன்று இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“விசேடமாக போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ள யோசனையில் முதலாம் (கோட்டபய ராஜபக்ச பதவி விலகல்), இரண்டாம் (ரணில் – அமைச்சரவை பதவி விலகல்) யோசனைகளைச் செயற்படுத்தாமல் மூன்று மற்றும் நான்காவது விடயங்களைச் செயற்படுத்த முடியாது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிக்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ள காரணத்தால் எதிர்க்கட்சிக்கு எதனையும் செயற்படுத்த முடியாத நிலையில் போராட்டக்காரர்களின் ஒன்றிணைவால் ஜனாதிபதிக்குப் பதவி விலக நேரிட்டுள்ளது.

கடந்த முப்பது வருடகாலமாக அதிகாரப் பேராசைக்காகக் காத்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது.

ஆகவே, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியுமா என்பது சந்தேகத்துக்குரியது. ஏனெனில் போராட்டத்தால் லிபியாவில் ஸ்தீரமான அரசை உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, ஜனாதிபதி பதவி விலகியதைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகாவிடின் அவர் பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்பார்; அதனைத் தடுக்க முடியாது.

அவர் பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபடுதற்கு முன்னர், அதனைத் தடுக்கும் வகையில் அனைவரும் ஒன்றுதிரள வேண்டும். ஏனெனில் இவர் வெட்கமற்ற நபர் என்பதை நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளேன்.

இவரது வீடு எரிக்கப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியது. இருப்பினும் அந்தச் சம்பவம் சந்தேகத்துக்குரியது. பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் அது பிரச்சினையாக அமையும். அரசுக்குள் திருடர்கள் பலர் உள்ளார்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தமது விருப்பத்துக்கமைய ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரைத் தெரிவு செய்யக் கூடும். ஆகவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகலுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.

அவர் பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்றத்தைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவது சாத்தியமற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி விலக்கும் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்” – என்றார்.


Leave A Reply

Your email address will not be published.