பேச்சு சுதந்திரம் என்பது பிரதமரை வசைபாடுவதற்கு அல்ல – உயர் நீதிமன்றம்

அரசியல் சாசனம் வழங்கியுள்ள பேச்சுரிமை என்பது பிறரை இழிவுபடுத்தி வசைபாடுவதற்கு அல்ல என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஜாவுன்பூர் பகுதியை சேர்ந்தவர் மும்தாஸ் மன்சூரி. இவர் 2020ஆம் ஆண்டில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா மற்ற அமைச்சர்களை பேஸ்புக்கில் விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார். மும்தாஜ் பதிவு பிரதமர் உள்ளிட்டோர் மிக மோசமாக அவமதிப்பதாக உள்ளது எனக் கூறி இபிகோ 504, ஐடி சட்டம் பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் உத்தரப் பிரதேச காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட நபர் பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்டோரை இழிவாக குறிப்பிட்டு திட்டியதாக எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என மும்தாஜ் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். நீதிபதி அஸ்வினி குமார், நீதிபதி ராஜேந்திர குமார் ஆகியோரின் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசியல் சாசனம் குடிமக்களுக்கு பேச்சுரிமை வழங்கியுள்ளது. அதைக் கொண்டு பிறரை வசைபாடுதல், இழிவாக பேசுதல் போன்றவற்றை ஏற்க முடியாது. பிரதமர், அமைச்சர் போன்றோரை இவ்வாறு திட்டி பேசுவது பேச்சுரிமை அல்ல. எனவே எப்ஐஆரின்படி குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதால் சட்ட நடவடிக்கையை தொடர காவல்துறைக்கு அனுமதி அளித்து மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், விசாரணையை விரைந்து முடிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.