இன்று வேட்புமனு; நாளை வாக்கெடுப்பு – ஆதரவைத் திரட்டும் பேச்சுகள் மும்முரம்.

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வேட்புமனுத் தாக்கல், வாக்கெடுப்பு என்பன இன்றும், நாளையும் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று முதல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடாளுமன்றம் செல்வதற்கான பிரதான நுழைவாயில்களில் வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். படையினரும் உஷார் நிலையில் உள்ளனர். புலனாய்வுப் பிரிவும் களமிறக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புதிய ஜனாதிபதித் தெரிவு இடம்பெறவுள்ள சூழ்நிலையில், நாட்டில் நேற்று முதல் அமுலாகும் வகையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்குக் கடும் எதிர்ப்புகள் வலுத்துள்ளன.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடுகின்றது. இதன்போது ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ, டலஸ் அழகப்பெரும ஆகிய நால்வரும் கொழும்பில் நேற்று முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தியிருந்தனர். தமக்கான ஆதரவைத் திரட்டும் முயற்சியில் அவர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு, நாடாளுமன்றகி கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்றது. இதன்போது ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் ஆதரவு ரணிலுக்கென உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவுக்கும் இடையிலான விசேட சந்திப்பும் நேற்று இடம்பெற்றது.

‘டலஸ் ஜனாதிபதி, சஜித் பிரதமர்’ என்ற இலக்கை அடையும் நோக்கிலேயே பலரின் முயற்சியால் சந்திப்புக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், இதன்போது இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்ல. வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னர் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன்பின்னர் விமல், வாசு, கம்மன்பில உட்பட 10 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான பேச்சு நடைபெற்றது. இறுதி இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை. எனினும், ‘டலஸ் ஜனாதிபதி, சஜித் பிரதமர்’ என்ற விடயத்துக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. 10 கட்சிகளின் நிலைப்பாடும் இன்று அறிவிக்கப்படும்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் நேற்று முக்கிய சந்திப்புக்களை நடத்தியிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.