ஆதாரம் இல்லாமல் வழக்கு தொடர்ந்தால் அபராதம் – சட்டவிரோத பார்களுக்கு எதிரான மனுவில் நீதிமன்றம் எச்சரிக்கை

மொட்டை மாடிகளில் சட்டவிரோதமாக செயல்படும் மதுபான பார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பாடியைச் சேர்ந்த பாலசந்தர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் அனுமதி பெற்ற இடத்தை விடுத்து அனுமதியில்லாத பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்படும் பார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். சென்னை அண்ணாநகரில் உள்ள மால் ஒன்றில் உள்ள மொட்டைமாடி பாரில் நடந்த விருந்தின் போது ஒருவர் மரணமடைந்ததை அடுத்து அந்த பாருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபோன்ற மொட்டை மாடி பார்களில் மதுபானங்கள் தவிர போதைப் பொருட்களும் பயன்படுத்தப்படுவதாகவும், ஹூக்காக்கள் உபயோகிக்கப்படுவதாகவும், அதன் காரணமாக தீ விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு, எந்த ஆதாரங்களும் இல்லாமல் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறி அபராதம் விதிக்கப் போவதாக எச்சரித்ததை அடுத்து, மனுவை திரும்பப் பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது.

இதை ஏற்று, மனுவை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.