ஆட்சிப்பீடம் ஏற வழியமைத்த போராட்டக்காரர்களை வேட்டையாடும் ரணில் – சுமந்திரன் பகிரங்கக் குற்றச்சாட்டு.

“ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால்தான் ஆட்சிக்கு வந்தவர்கள். யார் யார் முதுகில் ஏறிப் பதவிக்கு வந்தார்களோ அவர்களை இன்று ரணில் தரப்பினர் வேட்டையாடுகின்றனர். நாட்டை மீட்பதற்குப் போராடிய ஆர்ப்பாட்டக்காரர்களைக் காப்பாற்ற மக்கள் முன்வரவேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“நாட்டில் அரசின் அடக்குமுறைகள் அதிகரித்துச் செல்கின்றன. அமைதியாக இடம்பெற்ற மக்கள் போராட்டத்தால் நாட்டில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டைச் சூறையாடிய ராஜபக்சக்களை விரட்டி அடிப்பதற்கான மக்கள் போராட்டத்தில் வெற்றி கண்டுள்ளனர். போராட்டத்துக்கு மக்கள் ஆதரவும் கிடைத்தது. ஆனால், இன்று அதே ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்படுகின்றனர்.

அவர்களைக் காப்பாற்ற வருவதற்கு பலர் பயப்பிடுகின்றனர். நாடாளுமன்றில் நேற்றுமுன்தினம் கூட இது பற்றிப் பலர் கதைத்துள்ளனர். முதல் அங்கே நடைபெற்றது மக்கள் போராட்டம், பின்னர் அது வேறு நபர்களால் கைப்பற்றப்பட்டது என்றவாறான கருத்துக்களைக் கூறியுள்ளனர்.

போராட்டத்துக்குத் தலைமைத்துவம் வழங்கியவர்கள் இன்று தேடித் தேடி கைதுசெய்யப்படுகின்றனர். ஆனால், நாட்டை நாசமாக்கியவர்கள் இன்றும் சுற்றித் திரிகின்றனர். அவர்களை கைதுசெய்வதற்குப் பாதுகாப்புத் தரப்பினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இன்று ஆட்சியில் உள்ள ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்கள் ஒன்றை மட்டும் மறக்கக் கூடாது. ஆர்ப்பாட்டத்தால்தான் அவர்கள் ஆட்சிக்கு வந்தவர்கள். யார் யார் முதுகில் ஏறிப் பதவிக்கு வந்தார்களோ அவர்களே இன்று வேட்டையாடப்படுகின்றனர்.

இந்தக் கைதுகள் கண்டிக்கப்பட வேண்டியவை. ஆகவே, மக்களிடம் நான் ஒன்றைக் கேட்டுக்கொள்கின்றேன். நாட்டைக் கொள்ளையடித்தவர்களை விரட்டியடித்த இந்த ஆர்ப்பாட்டக்காரர்களைக் காப்பாற்ற மக்கள் முன்வர வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.