ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா.. இன்று சிறப்பு முகாம்..! மிஸ் பண்ணிடாதீங்க

தமிழகம் முழுவதும் குடும்ப அட்டை விண்ணப்பம் , திருத்தங்கள் மேற்கொள்வதற்கான சிறப்பு மக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.

வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கும் சரியான ஊட்டச்சத்தும், அடிப்படை உணவும் கிடைக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதே நியாயவிலைக்கடைகள். பொது விநியோகத்தின் மூலம் குறைந்த விலையில் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை பொறுத்து உணவு பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது.

பொது விநியோகத்தின் பலன்களை பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு உள்ள குறைகளையும், சேவை குறித்த விண்ணப்பங்களையும் கேட்டறிய மாதம் தோறும் இரண்டாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குறை தீர்ப்புக் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்தக் குறைதீர் முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை நகல் கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.

நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்தகுடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படுகிறது. மேலும் பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றையும் பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் தெரிவிக்கலாம்

ஆகஸ்ட் 2022 மாதத்திற்கான குடும்ப அட்டை விண்ணப்பம் , திருத்தங்கள் மேற்கொள்வதற்கான சிறப்பு மக்கள் குறைதீர்ப்பு முகாம் இரண்டாம் சனிக்கிழமையான இன்று ஆகஸ்ட் 13 தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இந்த முகாம் நடைபெறவுள்ளதை அடுத்து, குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை தலைமை மண்டல ஆய்வாளர் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.