அடுத்த பொதுத் தேர்லில் யார் கை ஓங்கும்?

‘சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய பாரதீய ஜனதாக் கட்சியைப் போன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவைக் (மொட்டு) கட்டியெழுப்ப விரும்புகிறேன்…’

இது டிசம்பர் 4, 2021 அன்று ‘தி இந்து’ நாளிதழுக்கு பசில் ராஜபக்ச கொடுத்த பேட்டி.

‘பசிலின் குழந்தை கட்சி வரலாற்று சாதனையாக சூப்பர் வெற்றியை பெற்றது…’

2020 பொதுத் தேர்தலுக்குப் பிறகு பொதுஜன பெரமுனவின் வெற்றியை வெளிநாட்டு ஊடகங்கள் வரையறுத்த விதம் இதுதான்.

‘எமக்கு 70 லட்சம் கிடைத்தால், இரண்டாவது பெரிய கட்சிக்கு 35 லட்சம் கூட கிடைக்காது…’

2020 பொதுத் தேர்தலுக்கு முன்னர் பசில் ராஜபக்ச கூறிய கணிப்பு இதுவாகும்.

இப்படியான பொதுஜன பெரமுன அல்லது மொட்டு கட்சி 2022 நவம்பர் மாதம் ஆகும் போது , கட்சி ஆரம்பித்து 06 வருடங்கள் பூர்த்தி ஆகின்றன.

சீன கம்யூனிஸ்ட் கட்சி, பாரதீய ஜனதா போன்ற கட்சிகளைப் போல, மொட்டை உருவாக்க நினைத்த பசிலின் கட்சி , ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் பதவி மட்டுமல்ல, சபாநாயகர் பதவியையும் இழந்த கட்சியாக ஆகிவிட்டது.

மொட்டு ஸ்தாபிக்கப்பட்ட போது , அது ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைக்கு எதிரானது. அவரது கொள்கைகளுக்கு எதிரானது.

அப்படியான கட்சி இன்று , வங்குரோத்து நிலைக்கு போய் ,  ரணிலை குத்தகை தலைவராக அமர்த்தும் அளவுக்கு சென்றுவிட்டது.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஜனாதிபதிகளை வாடைக்கு பணியமர்த்தும் நடவடிக்கையை ரணில்தான் முதலில் ஆரம்பித்தார்.

அதற்குக் காரணம், ஜனாதிபதித் தேர்தலில் ரணிலால் ,  ஒருபோதும் வெற்றிபெற முடியாத நிலை இருந்தது.

2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ரணில் ,  பொன்சேகாவை வாடகைக்கு அமர்த்தினார்.

மைத்திரிபாலவை ,  2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ரணில் வாடகைக்கு அமர்த்தினார்.

2009 ,  போரில் வெற்றி பெற்ற இராணுவ தளபதி பொன்சேகா.

2014 இல் 48 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால.

ஆனால் ரணில் , அந்த ஜனாதிபதி பதவியை பொன்சேகாவிற்கோ அல்லது மைத்திரிபாலவிற்கோ கொடுக்கவில்லை. அவர் வேட்புமனுவில் போட்டியிட மட்டுமே கொடுத்தார். வெற்றிபெற வேண்டிய பொறுப்பு மட்டும் ,  பொன்சேகா மற்றும் மைத்திரிபால மீது இருந்தது.

பொண்சேகா ,  தேர்தலில் தோற்றதால் பிரச்சனை அத்தோடு முடிந்து போனது.

மைத்திரி , ஜனாதிபதித் தேர்தலில் சிரமப்பட்டு வெற்றி பெற்ற பின்னரும் ரணில், 45 ஆசனங்களுக்கும் குறைவான ஆசனங்களைக் கொண்டிருந்த ஐ.தே.கவுக்கு பிரதமர் பதவியையும் அரசாங்கத்தில் பலம் வாய்ந்த அமைச்சர் பதவிகளையும் விரும்புவதாக மைத்திரியிடம் கூறினார்.

19வது அரசியலமைப்பு திருத்தத்தில் இருந்து நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் எனவும் சொல்லி அதையும் குறைத்தார்.

மைத்திரி கேட்டதை எல்லாம் செய்தார்.

45க்கும் குறைவான ஆசனங்களை பெற்றிருந்த ரணிலை பிரதமராக்கினார். தனது நிறைவேற்று அதிகாரங்களையும் ரணிலிடம் ஒப்படைத்தார்.

‘ஐயோ பசில் , ரணிலை ஜனாதிபதியாக்கி, ரணிலுக்கு விருப்பமான ஒருவரை பிரதமர் மற்றும் அமைச்சர்களாகவும்  நியமித்து, மூன்றில் இரண்டு பலத்தையும் கொடுத்து , 20 நிறைவேற்று அதிகாரங்களையும் கொடுத்த பின் , தோட்டத்தை குத்தகைக்கு கொடுத்துவிட்டு , பசில் இப்போது ஏன் வாயை மூடிக் கொண்டிருக்கிறார்… ?’

மொட்டை உருவாக்கி 2019 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் , அனைவரும் பசிலை BR (பசில் ராஜபக்ச) என்பது ஜே.ஆரின் அவதாரம் என்றனர். அவர் இலங்கை அரசியலின் மூளையாக திகழ்பவர். பசிலுக்கு ஏழு மூளைகள் இருப்பதாக பொதுஜன பெரமுனயில் உள்ளோர் பறையடித்தனர்.

‘தனக்கிருந்த 7 மூளையைப் பயன்படுத்தினாலும் தனது கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு கூட அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொடுக்க முடியாத அளவுக்கு பசில் எப்படி வங்குரோத்து ஆனார்?’

பசில் வங்குரோத்து ஆகவில்லை. பொதுஜன பெரமுனாதான் வங்குரோத்து ஆகியுள்ளது.

பொதுஜன பெரமுன இன்று சிதறிய நிலையில் உள்ளது. ஒரு பகுதியினர்  அமைச்சு பதவியை பெற ரணிலோடு இணைந்து செயல்படுகிறது. இன்னொரு பகுதி பசிலோடு இருக்கிறது. டலஸுடன் மற்றொரு பகுதி உள்ளது. இன்னொரு பகுதி விமல் வீரவங்சவுடன் திரிகிறது.

ஜனாதிபதி பதவியும் , அரசாங்கத்தையும் ரணிலிடம் கையளித்த பின்னர், ரணில் ஐக்கிய மக்கள் சக்தியை உடைத்துவிட்டு சஜித்தையும் முடித்துவிட்டு , அரகலய போராட்டத்தையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என நினைப்பவர்களும் மொட்டு கட்சியில் உள்ளனர்.

அப்படியான மொட்டுகாரர்கள் , ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அரகலய போராட்டத்துடனான வெறுப்பு தீர்வாகிவிட்டதாக தமக்குள் மனதை தேற்றிக் கொள்வோராக இல்லாமல் இல்லை.

தன் மேல் உள்ள கோபத்தை போக்க , தன் முகத்தில் உள்ள மூக்கை யாரும் அறுத்துக் கொள்வதில்லை. அதைத்தான் மொட்டு செய்து கொண்டுள்ளது.

1970-1977 ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க , ருக்மான் சேனாநாயக்கவை பயன்படுத்தி யூ.என்.பியை பலமிழக்கச் செய்தார். ஆனால் அவர் , ருக்மனுக்கு பிரதமர் பதவியை வழங்கவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த நினைத்த ஜே.ஆர் ,  அனுர பண்டாரநாயக்கவைப் பயன்படுத்தினார். ஆனால் அவருக்கு , பிரதமர் அல்லது ஜனாதிபதி பதவிகளை JR வழங்கவில்லை.

ஐ.தே.க.வை பிளவுபடுத்துவதற்கு மகிந்த , கருவைப் பயன்படுத்தினார். ஆனால் அவருக்கு பொது நிர்வாக அமைச்சு பதவிதான்  வழங்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளை உடைத்து , எதிர்க்கட்சிகளின் அரகலய போராட்டங்களை பழிவாங்குவதற்காக , ஜனாதிபதி, பிரதமர் பதவி, அரசாங்க ஊடகம் என்று அனைத்து பலத்தையும் கொடுத்துவிட்டு கையை பிசையும் , மோட்டு கட்சிகளை உலகில் எங்கும் காண முடியாது. அதுதான் இப்போது நடந்துள்ளது.

‘அடுத்த தேர்தலில் யானைக்கும் இதே நிலை வருமா…?’

அது போல்தான் தெரிகிறது. ரணில் தன்னைத் தவிர வேறு யாருக்கும் U.N.Pயின் தலைமை பொறுப்பை கொடுக்க விரும்பாத காரணத்தினாலேயே U.N.P பலவீனமடைந்தது.

மேலும் தமக்கு ஜனாதிபதி பதவியோ அல்லது பிரதமர் பதவியோ கிடைக்காவிடின் ,  ஜனாதிபதி பதவியையோ அல்லது பிரதமர் பதவியையோ ஐக்கிய தேசியக் கட்சியில் எவருக்கும்  கிடைக்க விட மாட்டேன் எனும் எண்ணத்தில் ரணில் எப்போதுமே இருந்தார்.

அந்தக் கருத்தின் அடிப்படையில் இருந்து கொண்டுதான் 2010 இல் பொன்சேகாவையும் , 2015 இல் மைத்திரிபாலவையும் போட்டியிட அமர்த்தினார். அந்த காரணத்தால்தான் மக்கள் , யூ.என்.பி.யை தூக்கி எறிந்தனர்.

மத்திய வங்கி திருட்டுக்கு எதிராகவும், புலம்பெயர் புலிகளுக்கு ஆக்சிஜன் கொடுப்பதற்கு எதிராகவும், ஞானசார தேரரை சிறையில் அடைத்ததற்கு எதிராகவும், முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு விளையாட விட்டதற்கு எதிராகவும், தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு எதிராகவும், அரச வளங்களை விற்பதற்கு எதிராகவும் எனச் சொல்லி, ரணிலின் அரசாங்கத்தை தோற்கடிக்க தீர்மானித்த மொட்டின்  69 இலட்சம் பேரை புறக்கணித்து , அந்த 69 லட்சத்தை கொடுத்த மக்களை மதியாமல் , ரணிலையே ஜனாதிபதி பதவிக்கு மொட்டு அமர்த்தியது.

அந்த 69 லட்சமும் மொட்டுவிடம் பழி தீக்குமா?

பசிலே மொட்டை வளர்த்து , பசிலே மொட்டை அழித்து விட்டு நிற்பது , ரணிலைப் போல் பசிலும் சிந்திக்க ஆரம்பித்ததனால்தான்.

அதாவது ராஜபக்சேவைத் தவிர வேறு எவரும் மொட்டு கட்சிக்குள் இருந்து , ஜனாதிபதி பதவியையோ, பிரதமர் பதவியையோ பெறக் கூடாது என்ற எண்ணம் அவர்களுக்கு வந்தது. மொட்டுவைச் சேர்ந்த ஒருவர் பிரதமரானால் , மொட்டில் உள்ளோர் அவரை சூழ்ந்து விடுவர் என்ற அச்சத்தில் ,  மொட்டில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் எவரையும் பிரதமர் பதவிக்கு , பசில் தரப்பினர் முன்மொழியவில்லை . இதுவே ரணிலுக்கும் இருந்த நோயாகும். இப்போது அந்த நோய் பசிலையும் பாதித்துள்ளது. அந்த நோய்தான் மொட்டை இல்லாமல் ஆக்கப் போகிறது.

1994 வரை இலங்கையின் மிகப்பெரிய கட்சி ஐ.தே.கவாகும். 1994 க்குப் பிறகு ஐ.தே.க சிறிது சிறிதாக கரையத் தொடங்கியது.

SLFP ஒரு பெரிய கட்சியானது.

2014 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்தவர் ரணில்.

மைத்திரிபாலவை , ஜனாதிபதி வேட்பாளராக அமர்த்தி , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைத்து தேசிய அரசாங்கத்தை அமைத்தே அக் கட்சியை அழித்தார்.

அதன் விளைவாகத்தான் பொதுஜன பெரமுன (மொட்டு) உருவானது. ரணில் , மைத்திரியை வாடகைக்கு அமர்த்த போய் கிட்டத்தட்ட ஐ.தே.கவையும் இல்லாமல் ஆக்கிக் கொண்டார்.

‘ரணில் ஜனாதிபதியாக இருந்தும் , ஐக்கிய தேசியக் கட்சியை காப்பாற்ற முடியாதா?’

ரணிலின் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி இணைந்த நாள் முதல், மைத்திரியை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் எப்படி வெறுத்தனரோ, இப்போது ராஜபக்ச , ரணிலை ஜனாதிபதி ஆக்கிய நாள் முதல், ரணிலை ஐ.தே.கவினரும் வெறுக்கத் தொடங்கியுள்ளனர்.

அன்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிரியான ரணிலுடன் மைத்திரி கூட்டு சேர்ந்தார்.

இன்று ரணில் , யூ.என்.பியின் எதிரியான ராஜபக்சவுடன் கூட்டு சேர்ந்துள்ளார்.

ரணில் , ராஜபக்சவினரோடு இணைந்ததனால் , ரணிலுக்கு 2020ல் கிடைத்த வாக்குகள் கூட எதிர்காலத்தில்  கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

ரணில் , ராஜபக்சவுடன் கூட்டு சேர்ந்தமையால் , 2019ம் ஆண்டு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் , 2020 ஆம் ஆண்டில் மொட்டு கட்சி , புலம்பெயர் புலிகளுக்கு எதிராகவும், முஸ்லீம் தீவிரவாதத்திற்கு எதிராகவும், அரச சொத்துக்களை விற்பதற்கு எதிராகவும் வாக்குகளை கைப்பற்றும் திறன் கொண்டதாக  ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இருந்தது.

‘எனக்கு ஜனாதிபதியாவதற்கு ரணில் உதவிய போதும்,  ரணிலை நான் பிற்போக்குவாதி என்பதற்காக அழித்தேன். ஆனால் அதே ரணிலை , ராஜபக்சவினரே ஜனாதிபதியாக்கினார்கள் …’

மைத்திரிபால இப்படி மொட்டு வாக்குத்தளத்திடம் கூறியிருக்க முடியும். ஆனால் மைத்திரி, ரணிலுக்காக, ராஜாக்ஷவினரை விட சத்தமாக ஆதரவு கொடுத்து கூவ ஆரம்பித்துவிட்டார்.

அதாவது ஸ்ரீ.ல.சு.கட்சியும் முடிந்து விட்டது.

ராஜபக்சக்களும், ரணிலும் ஏற்கனவே கட்சியை உடைத்துவிட்டனர். அத்தனை கட்சிகளும் சிதறிவிட்டன.

‘மொட்டும் (ராஜபக்ச கட்சி), யானையும் (ரணிலின் கட்சி), கையும் (மைத்ரியின் கட்சி) இல்லாமல் போனால் என்னதான் மிச்சம்…?’

இன்று இலங்கையின் மிகப் பெரிய கட்சி சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியாகும்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு சவால் விடக்கூடிய கட்சி ஜனதா விமுக்தி பெரமுனாவாகும்.

இதையறிந்த ரணிலும் ராஜபக்சவும் ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்க முயல்கின்றனர். ஆனால் கட்சியை ஒற்றுமையாக வைத்திருக்க சஜித் , கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள எம்பிக்கள் அனைவரும் ரணிலின் சீடர்கள். ரணில் அரசியலுக்குக் கொண்டு வந்தவர்கள். ரணிலை தலைவர் என அழைத்தவர்கள். அவர்களில் பலருக்கு அரசியலின் முடிவு பலம் வாய்ந்த ஒரு அமைச்சர் பதவியாகும்.

இன்று ரணில் , அவர்களை தன் வசம் இழுத்துக் கொள்ள 24 மணி நேரமும் அமைச்சு பதவிகளை காட்டி காட்டி பயங்கரமாக விளையாடி வருகிறார். அதற்கு ராஜபக்சக்களும் உதவுகிறார்கள்.

ரணில் ஜனாதிபதியான நாள் முதல் இன்று வரை , ராஜபக்சக்களுக்காக புலம்பும் ஊடகங்களும், இணையத்தளங்களும் இணைந்து பரப்புரை செய்யும் , மிகப்பெரிய செய்திகளாக இருப்பது ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் உடைத்துக் கொண்டு, ரணிலோடு இணைகிறார்கள் என்ற செய்திதான்.

அவர்களின் செய்திகளில் இன்று நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை. பொருட்களின் விலை பிரச்சனை இல்லை. ஒரே பிரச்சனை ஐக்கிய மக்கள் சக்தியை எப்படி உடைப்பது என்பதுதான்.

இந்த ராஜபக்ஷ ஊடக மாஃபியா, ரணிலின் தூண்டில், ராஜபக்சக்களின் பேய்களுக்கு மத்தியில் சஜித் எப்படியாவது கட்சியை உடைக்காமல் பாதுகாத்து வருகிறார்.

சஜித்தும் , ரணிலுக்கு முன் ஓடிப்போய் பிரதமர் பதவியை எடுத்திருந்தால் , சஜித் ஜனாதிபதியாகியிருக்க மாட்டார். கோட்டாதான் பதவியை தக்க வைத்துக் கொண்டிருப்பார். கோட்டா இன்றும் ஜனாதிபதியாக இருந்திருப்பார்.

சஜித் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு , ஐ.எம்.எஃப்.உதவிகளை கோட்டா பெற்ற பின் , சஜித்தை அடித்து துரத்தியருப்பார்.

அப்போது சஜித் பிரதமர் பதவியை ஏற்றிருந்தால் அன்றே அரகலய போராட்டமும் மழுங்கடிக்கப்பட்டு முடிவுக்கு வந்திருக்கும்.

சஜித்தின் நோக்கம் , ராஜபக்ஷக்களின் உதவியுடன் சில மாதங்களுக்கு பிரதமராக பதவியேற்பதில்லை, மாறாக 2024 ஆம் ஆண்டு மக்கள் ஆணையுடன் ஜனாதிபதியாக வர வேண்டும் என்றே எண்ணினார்.

இன்று ரணிலின் அரசில் அமைச்சர்களாகப் பதவியேற்றவர்கள் கூட 2024ஆம் ஆண்டு ராஜபக்சக்களின் உதவியோடு அமைச்சர்களாகியுள்ளோருக்கு , அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டிய நிலைதான் ஏற்படும்.

ராஜபக்சேவின் உதவியால் சில மாதங்கள் அமைச்சர்களாக இருப்பதா? அல்லது மக்கள் ஆணைப்படி பலமான அரசாங்கத்தின் கொள்கைகளை வைத்துக்கொண்டு 05 வருடங்கள் அமைச்சர்களாவதா…?’

இன்று ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் முடிவு செய்ய வேண்டியது மேலே சொன்ன 2ல் ஒன்றைத்தான்.

‘ராஜபக்சேவின் பாவங்களை கழுவும் ரணிலின் அரசு தோற்கடிக்கப்படுமா…?’

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இதுவாகும்.

இன்றைய கட்சித் தலைவர்கள் குழப்பத்திலும் , முடிவு செய்ய முடியாமலும் உள்ளனர்.

ரணில் எந்தக் கட்சித் தலைவர் என்று எவராலும் கண்டுபிடிக்க முடியாதுள்ளது. மஹிந்தவை கூட  எந்தக் கட்சித் தலைவர் என்று கண்டுபிடிக்க முடியாதுள்ளது.

இன்று இரண்டு தலைவர்கள்தான் கண்ணில் தெரிய உள்ளனர்.

ஒருவர் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித்.
இரண்டாவது நபர் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார.

எனவே இவர்கள் இருவருமே 2024ல் ஆட்சியையும் ,
எதிர்க்கட்சியையும் பகிர்ந்து கொள்வார்கள்.

உபுல் ஜோசப் பெர்னாண்டோ
தமிழில் : ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.