நல்லாட்சியில் முடியாததை இப்போதாவது செய்வோம்! – ரணில் முன்பாக துமிந்த திஸாநாயக்க தெரிவிப்பு.

“2015 இல் இருந்து இந்த நாளுக்காகத் காத்திருக்கிறோம். ஆனால் அன்று அதைச் சரியாகச் செய்ய முடியவில்லை. இன்று ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, முக்கியமான அரசியல் நீரோட்டங்கள் ஒன்றாக இணைந்து, நாட்டை இருந்ததை விட சிறந்த இடத்துக்கு கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.”

இவ்வாறு முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அநுராதபுரம் மாவட்டத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இன்று எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள். பல முக்கியமான அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் இன்று ஒன்றாக இருக்கிறார்கள். 2015 இல் இருந்து இந்த நாளுக்காகத் காத்திருக்கிறோம். ஆனால், அன்று அதைச் சரியாகச் செய்ய முடியவில்லை. அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து நாட்டை கட்டியெழுப்பும் ஆலோசனையை முன்வைத்த போதிலும் துரதிர்ஷ்டவசமாக அதனை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை.

ஆனால், விதியின் விளையாட்டால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தாய்க்கட்சியாகக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று உங்களை ஜனாதிபதியாக நியமித்துள்ளது. நல்லவைகள் சிறந்த நேரத்தில் நடக்காவிட்டாலும், இன்று ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, முக்கியமான அரசியல் நீரோட்டங்கள் ஒன்றாக இணைந்து, நாட்டை இருந்ததை விட சிறந்த இடத்துக்கு கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

நாம் வரலாறு பற்றி பேசிப் பயனில்லை. வரலாற்றை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். எத்தகைய தடைகள் வந்தாலும் நாடாளுமன்றத்தில் உங்களை வெற்றி பெறச் செய்தோம். இப்போது இந்த நாட்டைக் கட்டியெழுப்பவில்லையென்றால், வேறொரு நாள் கிடைக்காது இதற்கு முன்னர் இந்த நாட்டைக் கட்டியெழுப்பக் கிடைத்த இரண்டு சந்தர்ப்பங்களை இழந்துள்ளோம். அது சுனாமிப் பேரழிவும், போர் வெற்றியுமே. இதுவே நம் வாழ்நாளில் கிடைத்த கடைசி வாய்ப்பு.

உங்களுக்கு நல்ல அனுபவம் இருக்கின்றது. நாங்கள் உங்களைக் கேலி செய்தபோதும், எதிர்க்கட்சியில் சேர்ந்து நீங்கள் கடினமாக பணியாற்றினீர்கள். அதனால்தான் ஒரு பிரச்சினை வரும் நேரத்தில், மற்றத் தலைவர்கள் புத்தகங்களைப் புரட்டும்போது, அந்தப் பிரச்சினைகளுக்கும், எந்தக் கேள்விக்கும் உங்களிடம் பதில் இருக்கின்றது. போராட்டத்தின் மூலம் நாட்டில் மாற்றம் ஏற்படும் என நம்பிய இளைஞர் கூட்டம் இருந்தது. அரசியல் மாற்றம் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் மாற்றத்தை எதிர்பார்த்தனர். இந்த மாற்றத்தை நாடே கோரியது, நாங்கள் அரசியல் ரீதியாகப் பிளவுபட்டிருந்ததால் இதை முன்னரே செய்ய முடியவில்லை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.