வசந்த முதலிகே விவகாரத்தால் ஜெனிவாவில் இம்முறை சிக்குமா இலங்கை அரசு?

ஐ.நா. விசேட அறிக்கையாளர் வேண்டுகோள் விடுத்து 24 மணி நேரத்துக்குள் அதனைப் புறந்தள்ளி – தூக்கிக் கடாசிவிட்டு, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தில் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க கையெழுத்திட்டுள்ளார். இது சர்வதேச சமூகத்தின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாகவே இந்த நடவடிக்கைக்கு சர்வதேச சமூகமும் அதிருப்தியை எதிர்வினையாற்றியுள்ளது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, செயற்பாட்டாளர் ஹஷந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் வண. கல்வௌ சிறிதம்ம தேரர் ஆகியோரைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாள்களுக்குத் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்குப் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று அனுமதி வழங்கியுள்ளார்.

பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை மாலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட 19 பேரில் குறித்த மூவரும் அடங்குவர்.

சந்தேகநபர்களில் 15 பேர் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தால் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர். சந்தேகநபர் ஒருவர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எனினும், வண. கல்வௌ சிறிதம்ம தேரர், ஹஷந்த ஜீவந்த குணதிலக மற்றும் வசந்த முதலிகே ஆகியோர் பிணையில் விடுவிக்கப்படவில்லை. மாறாக 72 மணிநேர தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், தடுப்பு காவலில் வைக்கும் உத்தரவில் கையெழுத்திட வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றுமுன்தினம் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஜனாதிபதி அவ்வாறு கையெழுத்திடுவது இலங்கைக்கு இருண்ட காலமாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். அப்படியிருந்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையெழுத்திட்டமை சர்வதேச சமூகத்தை கொதிப்படையச் செய்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் உடனடியாகவே கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

“பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு இணங்காத சட்டங்களைப் பயன்படுத்துவது இலங்கையில் ஜனநாயகத்தை சிதைப்பதாக உள்ளது. மக்கள் தமது கருத்துக்களை தெரிவிக்கும் உரிமையை உறுதிப்படுத்துமாறு அரசிடம் கோருகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று இலங்கைக்கான கனேடியத் தூதுவர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பனவும் ஜனாதிபதியினதும் அரசினதும் இந்த நடவடிக்கையைக் கண்டித்துள்ளன.

அரசின் இத்தகைய செயற்பாடுகள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 51ஆவது கூட்டத் தொடரில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.