பாகிஸ்தானில் பலத்த மழையில் பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் பலி.

பாகிஸ்தானில் பரவலாக நாடு முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அங்கு பஞ்சாப் மற்றும் கைபர்பக்துங்குவா மாகாணங்களில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையாலும், வெள்ளத்தாலும் 6 பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளி மாணவர்கள் 6 பேரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு விட்டனர்.

பஞ்சாப் மாகாணத்தில் மலைப்பாதையில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் 2 பேர் பலியாகி உள்ளதை மீட்பு படையினர் உறுதிப்படுத்தினர். இடைவிடாமல் பெய்து வருகிற மழையால் பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள், சாலைகள், மின்வடங்கள், கால்வாய்கள் பெருத்த சேதம் அடைந்துள்ளன. வெள்ளத்தால் இடம் பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், ஆற்றங்கரைகளிலும், சிந்துநெடுஞ்சாலை ஓரங்களிலும் தங்கும் இடமின்றி தவிப்பது மானுட சோகமாக மாறி உள்ளது.

அவர்கள் இருக்கிற இடங்களிலும் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. தேரா காஜிகானின் பெரும்பகுதி தண்ணீரில் மூழ்கி உள்ளதால் மின்வினியோகம் தடைபட்டுள்ளது. மின்பரிமாற்ற உள்கட்டமைப்பும் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. டான்சா தடுப்பணையில் இருந்து ரோஜான் வரையிலான ரெயில்பாதையும் சின்னாபின்னமாகி விட்டது. என்.55 சிந்து நெடுஞ்சாலை வெள்ளத்தால் பலத்த சேதம் அடைந்துள்ளது. மழை, வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்பு, நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.