பிரான்ஸில் இருந்து தங்கம் கடத்தி வந்த இலங்கைப் பிரஜை வசமாகச் சிக்கினார்.

ஐந்து கோடியே 50 லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களைக் கடத்தி வந்த இலங்கைப் பிரஜை ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் சுங்க அதிகாரிகளால், இந்தச் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, மாலபே பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான இந்த நபர், சுமார் 10 ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் தொழில் புரிந்து வந்துள்ள நிலையில் நாடு திரும்பியுள்ளார்.

பாரீஸ் நகரில் இருந்து இன்று காலை 5.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த யு.எல்.564 என்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் இந்த நபர் தங்கத்தைக் கடத்தி வந்துள்ளார்.

விமான நிலையத்தில் பரிசோதனைகள் எதுவுமின்றி வெளியேறும் கிறீன் செனல் வழியாக வெளியேற முயற்சித்தபோதே சந்தேகநபரைச் சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபரிடம் இருந்து 2.414 கிலோ கிராம் தங்க ஆபணரங்களைச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்னர். அவற்றில் 586.8 கிராம் எடை கொண்ட தங்கச்சங்கிலியை சந்தேகநபர் கழுத்தில் அணிருந்தார் எனவும், ஏனைய தங்க ஆபரணங்கள் அவரது பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டன எனவும் சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.