நொடிகளில் தரைமட்டமான நொய்டா பிரமாண்ட இரட்டை கோபுரங்கள்.. அருவி உள்வெடிப்பு முறையில் தகர்க்கப்பட்டது

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட சூப்பர்டெக் நிறுவனத்தின், எமரால்ட் குடியிருப்பு சங்க இரட்டை கோபுரங்கள் அருவி உள்வெடிப்பு முறையில் 10 நொடிகளுக்குள் முழுவதுமாக தகர்க்கப்பட்டது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில் சூப்பர் டெக் நிறுவனத்தின் எமரால்ட் குடியிருப்பு சங்க இரட்டை கோபுரங்கள் கட்டப்பட்டன. இவற்றில் ஏப்பெக்ஸ் என்ற கட்டிடத்தில் மொத்தம் 32 தளங்கள் உள்ளன. சியான் கோபுரத்தில் 29 கோபுரங்கள் உள்ளன. கடந்த 2004ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட திட்டத்தின் படி, ஒரு கட்டடத்தில் 14 தளங்களும், மற்றொரு கட்டடத்தில் 9 தளங்களும், கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், 2012ம் ஆண்டு அந்த திட்டம் திருத்தப்பட்டு, 2 கட்டடங்களிலும் 40 தளங்கள் வரை கட்டுவதற்கு நொய்டா ஆணையம் அனுமதி அளித்தது.

இது விதிமீறல் எனக் கூறி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், இரண்டு அடுக்குமாடி கட்டடங்களையும் இடிக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், கட்டத்தை இடிக்கும் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த இரட்டை கோபுரங்களை இன்று தகர்க்க திட்டமிடப்பட்டது. இதற்காக கட்டிடத்தின் 20 ஆயிரம் இடங்களில் 3,700 கிலோ வெடிமருந்துகள் நிரப்பப்பட்டன.

இதையடுத்து. பிற்பகல் 2 மணியளவில் அருவி உள்வெடிப்பு முறையில் இந்த பிரமாண்ட இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டன. கட்டிடத்தை இடிப்பதற்காக ரூ.20 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்டிடத்தில் 915 குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் 633 குடியிருப்புகள் புக் செய்யப்பட்டன. முழுவதுமாக விற்பனை செய்யப்பட்டிருந்தால் சூப்பர் டெக் நிறுவனத்துக்கு ரூ.1200 கோடி கிடைத்திருக்கும். தற்போது குடியிருப்பை வாங்கியவர்களுக்கு வட்டியுடன் முழு தொகையையும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அந்நிறுவனத்துக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

கட்டிடம் இடிக்கப்பட்டதை தொடர்ந்து சுமார், 55 ஆயிரம் டன் கட்டிட கழிவுகள் அப்பகுதியில் குவிந்துள்ளது. இதனை 3,000 லாரிகளில் அகற்றுவதற்கு 3 மாதங்களுக்கு மேல் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.