மணீஷ் சிசோடியா வங்கி லாக்கரில் சிபிஐ ரெய்டு – கிடைத்தது என்ன?

மதுபான உரிம முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரை திறந்து சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சோதனையில் எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை என சிசோடியா தெரிவித்துள்ளார்.

டெல்லி அரசின் 2021-22ம் ஆண்டுக்கான மதுபானக் கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது, சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. கடந்த 19ம் தேதி சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 31 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டதுடன், அவரது வங்கி லாக்கர் சாவியை கைப்பற்றினர்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில், மணீஷ் சிசோடியா கணக்கு வைத்திருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு, சிபிஐ அதிகாரிகள் 5 பேர் சென்றனர். அவர்களுடன் சிசோடியாவும், அவரது மனைவியும் சென்றனர். இதையடுத்து சிசோடியாவின் வங்கி லாக்கரை திறந்து சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மணீஷ் சிசோடியா, தமது லாக்கரில் கணக்கில் வராத எந்த பொருட்களும் சிக்கவில்லை என்றும், 80,000 ரூபாய் மதிப்புள்ள தமது மனைவியின் நகைகள் மட்டுமே இருந்தது எனவும் கூறினார். பிரதமர் மோடி சிபிஐ அதிகாரிகளை தமது வீட்டுக்கு அனுப்பியதாகவும், 3 மாதங்களுக்குள் தம்மை சிறைக்கு அனுப்ப அவர் சிபிஐக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து சட்டப்பேரவையில் உரையாற்றிய சிசோடியா, மாநில அரசுகளை வெளியேற்றும் வகையில், பாஜக தலைமையிலான மத்திய அரசு கொலைகாரர்கள் போல் செயல்படுவதாக விமர்சித்தார். டெல்லியின் துணை நிலை ஆளுநரான வி.கே.சக்சேனா, காதி ஆணையத்தின் தலைவராக இருந்த போது 1,400 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அவரிடம் சிபிஐ விசாரணை நடத்துவது எப்போது என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ள சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, டெல்லி அரசின் மதுக் கொள்கையை பார்க்கும் போது தாங்கள் அதிகார போதையில் மூழ்கியது தெரிகிறது என விமர்சித்துள்ளார். புதிய மதுக்கொள்கை மதுபான விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அவர், இது ஊழலுக்கு வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.