வடக்கு காணி ஆணையாளரின் சுற்றறிக்கையை உடன் இரத்துச் செய்க! – ரணிலிடம் சார்ள்ஸ் கோரிக்கை.

“மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணிகள் விவாசாயம் செய்யப்படாதவிடத்து அதற்கான அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும் என்று வடக்கு மாகாண சபையினுடைய மாகாண காணி ஆணையாளர் விடுத்துள்ள சுற்றறிக்கை உடனடியாக இரத்துச் செய்யப்பட வேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இடைக்கால வரவு – செலவுத் திட்டம் மீதான முதலாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்த அவர், மேலும் தெரிவிக்கையில்,

“வற் வரிகள் அதிகரிக்கப்பட்ட இந்த 4 மாதங்களுக்கான இடைக்கால வரவு – செலவுத்திட்டம் பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு எப்படி நிவாரணத்தை வழங்கப்போகின்றது?

5 ஏக்கருக்குட்பட்ட விவசாய நடவடிக்கைகளுக்குப் பெறப்பட்ட வங்கிக்கடன்கள் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வாறான விவசாயக்கடன் தள்ளுபடி அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டபோதும் அவை மக்களை சரியாக சென்றடையவில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

எனவே, கமநல திணைக்களம் இது தொடர்பில் முறையான திட்டமிடல்களை முன்னெடுத்து மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேசிய வருமான வரி திணைக்களத்தில் பதிய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு முதலில் 18 வயது இளைஞன் – யுவதிகள் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் வகையில் ஆட்சியாளர்கள் நாட்டை வைத்திருக்க வேண்டும்.

தமது எதிர்காலம் என்னவெனத் தெரியாத நிலையில் இளைஞர் – யுவதிகள் உள்ள நிலையில் வருமான வரி திணைக்களத்தில் அவர்கள் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறுவது அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்ததாக அரச நிறுவனர்களில் இடம்பெறும் ஊழல், மோசடிகளைக் கட்டுப்படுத்த அமெரிக்காவிலுள்ள நடைமுறை இங்கும் கொண்டுவரப்படவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இது ஒருபோதும் நடக்காது. அரசியலும் அரச நிறுவனர்களில் நடக்கும் ஊழல், மோசடிகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டது.

தற்போது கூட அரச நிறுவனங்களுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான தரகுப் பணம் அரசியல்வாதிகளுக்குச் சென்று கொண்டிருக்கின்றது. எனவே, இதனை ஆட்சியாளர்களினால் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது.

இன்றும் அரச நிறுவனங்கள் ஊடாக ராஜபக்ச குடும்பத்துக்கு வருமானங்கள் சென்று கொண்டிருக்கின்றன. ஆகவே, இந்த அரச நிறுவனங்களில் நடக்கின்ற மோசடிகளைத் தடுப்பது என்பது தற்போதுள்ள அரசுக்கு எட்டாக்கனியாகவே இருக்கும்.

மண்ணெண்ணெய் இல்லாது பாதிக்கப்பட்டுள்ள பெரும்தொட்டத்தொழிலாளர்கள், மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்து. முதலில் மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டபோது அது படகுகளின் உரிமையாளர்களையே சென்றடைந்தது. ஆகவே, வழங்கப்படும் நிவாரணம் மீன்பிடிக்கக் கடலுக்கு செல்கின்ற சகல மீனவர்களுக்கும் கிடைக்க வேண்டும்

வடக்கு மாகாண சபையினுடைய மாகாண காணி ஆணையாளர் வடக்கு மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணிகள் விவாசாயம் செய்யப்படாதவிடத்து அதற்கான அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக மக்களுக்குப் போதியளவு உரம் இல்லை. எரிபொருள் இல்லை. மக்கள் தங்கள் காணிகளுக்குச் சென்றுவரக்கூடிய சூழ்நிலை இல்லை. விதைகள், கிருமி நாசினிகள் இல்லை. இவ்வாறான சூழ்நிலையில் அந்த மக்கள் ஏன் அந்தக் காணிகளில் விவசாயம் செய்ய வில்லை என்று ஜனாதிபதி ஆராய வேண்டுமே தவிர விவசாயம் செய்யாத காணிகளை மீளப் பறிக்கவேண்டும் என்ற கொள்கை முற்றிலும் மக்களுக்கு விரோதமானது.

வடக்கு மாகாண காணி ஆணையாளர், அந்த மக்கள் ஒரு ஏக்கர், இரு ஏக்கர் காணிகளைப் பெற்றுக்கொள்ள எவ்வளவு காலம் அலைந்திருப்பார்கள், கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். வெறுமனே விவசாயம் செய்யாத காணிகளை ஏன் அதில் விவசாயம் செய்யவில்லை என்பதை அறிந்து அவர்கள் விவசாயம் செய்வதற்குரிய வழிவகைகளை அரசு செய்ய வேண்டுமே தவிர அவர்களின் காணிகளைப் பறிக்கக்கூடாது. எனவே, அவர்களின் காணிகளைப் பறிக்கும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோருகின்றேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.