கோட்டாவைப் பாதுகாப்பது அரசின் கடமை! – இப்படிக் கூறுகின்றார் தினேஷ்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் கோட்டாபய ராஜபக்சவைப் பாதுகாப்பது அரசின் கடமை என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஊடகங்களிடம் தெரிவித்தார்.

மீண்டும் நாடு திரும்பியுள்ள கோட்டாபய ராஜபக்சவுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை அரசு வழங்கியுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

அவர் மீண்டும் அரசியலுக்குள் வருவதா என்பது தொடர்பில் அவரே முடிவு எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன மேலும் குறிப்பிட்டார்.

மக்களின் மாபெரும் எதிர்ப்புப் போராட்டங்களையடுத்து இலங்கையைவிட்டுத் தப்பியோடி ஜனாதிபதி பதவியை இராஜிநாமா செய்த நிலையில் வெளிநாடுகளில் அலைந்து திரிந்த கோட்டாபய ராஜபக்‌ச, நேற்று நள்ளிரவு மீண்டும் நாடு திரும்பினார்.

கடந்த ஜூலை 9ஆம் திகதி போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டிருந்த நிலையில், அங்கிருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்‌ச, ஜூலை 13ஆம் திகதி அதிகாலை இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தில் மாலைதீவு சென்றிருந்தார்.

ஜூலை 14 ஆம் திகதி மாலை மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் சென்றிருந்த அவர், அன்றிரவு ஜனாதிபதி பதவியை இராஜிநாமா செய்திருந்தார்.

28 நாட்கள் சிங்கப்பூரில் தங்கியிருந்த கோட்டாபய, ஆகஸ்ட் 11ஆம் திகதி தாய்லாந்துக்குப் பயணமாகியிருந்தார்.

மூன்று வாரங்களாகத் தாய்லாந்தில் தங்கியிருந்த கோட்டாபயவின் பாதுகாப்பை இலங்கை அரசு உறுதி செய்ததை அடுத்து அவர் மீண்டும் நாடு திரும்பினார்.

தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் வழியாக அவர் நாட்டை வந்தடைந்தார்.

சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானமான SU 468 இல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு 11.48 மணியளவில் அவர் வந்து இறங்கினார்.

அரசியல்வாதிகள் சிலர் கோட்டாபயவை கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று சந்தித்தனர்.

அதன்பின்னர் அவர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரசால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லத்துக்குச் சென்றடைந்தார்.

சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், மனித உரிமை மீறல்களுக்காக கோட்டாபய மீது வழக்குத் தொடரக் காத்திருக்கின்ற நிலையில், அவர் நாடாளுமன்ற உறுப்பினரானால் அந்த வழக்குகளில் இருந்தும், சில தனி நபர்களிடமிருந்தும் தப்பிக்கலாம் என்ற நோக்குடன் அவரைத் தேசியப்பட்டியல் ஊடாக அரசியலுக்குள் கொண்டுவர ‘மொட்டு’க் கட்சியினர் வியூகம் வகுத்துள்ளனர் என்று தெரியவருகின்றது.

1 Comment
  1. விஸ்வநாத ஐயர் மஹேஸ்வரசர்மா says

    எல்லாத்திருடர்களையும் ரணில் ராஜபக்ஷ தான் காப்பற்றவேண்டும்
    மக்களைப்பற்றியே கவலை தினேஸிற்கு இல்லை
    என்னடா அரசு இது சீ வெட்கம் ரோசம் மானம் இல்லாத அரசியல்வாதிகள்
    திருடனுக்குப் பாதுகாப்புக்காக என்ன எல்லாம் செய்யிறாங்க படுபாவிகள்

Leave A Reply

Your email address will not be published.