ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் பலப்பரீட்சை.

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் (20 ஓவர்) போட்டி தொடரில் துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் சூப்பர்4 சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை லீக் ஆட்டத்தில் மோதிய இவ்விரு அணிகளும் அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் ஒருமுறை நேருக்கு நேர் சந்திக்கின்றன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், 2-வது லீக் ஆட்டத்தில் 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கையும் தோற்கடித்து ‘ஏ’ பிரிவில் முதலிடத்தை பிடித்து சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் சிறப்பான தொடக்கம் காண வேண்டியது அவசியமானதாகும்.

விராட்கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆல்-ரவுண்டராக அசத்திய ஹர்திக் பாண்ட்யா அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். காயம் காரணமாக விலகிய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள அக்‌ஷர் பட்டேல் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் கச்சிதமாக செயல்பட்டு வருகிறார். ஹாங்காங்க்கு எதிரான ஆட்டத்தில் அவேஷ் கான், அர்ஷ் தீப் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தனர். யுஸ்வேந்திர சாஹல் இரு ஆட்டங்களிலும் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. இது இந்திய அணிக்கு கவலை அளிக்கும் விஷயமாகும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:- இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம், பஹர் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஷதப் கான், ஆசிப் அலி, முகமது நவாஸ், ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா, ஹசன் அலி அல்லது முகமது ஹஸ்னைன். இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Leave A Reply

Your email address will not be published.