வாரத்தில் ஒரு நாள் புத்தக பைகள் அவசியமில்லை

பள்ளி மாணவா்கள் கொண்டுசெல்லும் புத்தகப் பைகளுக்கான எடை வரைமுறையை நிா்ணயித்துள்ள மத்திய பிரதேச அரசு, பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் ‘புத்தகப் பைகள் இல்லாத நாளாக’ கடைப்பிடிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக பள்ளிக் கல்விக் கொள்கையை மத்திய பிரதேச அரசு வெளியிட்டுள்ளது. அதில், மாணவா்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைப்பதற்கு முக்கியத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1, 2-ஆம் வகுப்பு மாணவா்கள் 1.6 முதல் 2.2 கிலோ வரையிலான பைகளையும், 3, 4, 5-ஆம் வகுப்பு மாணவா்கள் 1.7 முதல் 2.5 கிலோ வரையிலான பைகளையும் கொண்டுசெல்ல வரைமுறை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 6, 7-ஆம் வகுப்பு மாணவா்கள் 2 முதல் 3 கிலோ எடை வரையிலான பைகளையும் 8-ஆம் வகுப்பு மாணவா்கள் 2.5 முதல் 4 கிலோ வரையிலான பைகளையும் 9, 10-ஆம் வகுப்பு மாணவா்கள் 2.5 முதல் 4.5 கிலோ வரையிலான பைகளையும் கொண்டுசெல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பைகளின் எடை குறித்து பள்ளிகள் துறைசாா்ந்து முடிவெடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாடத் திட்டம் சாராத கூடுதல் நடவடிக்கைகளில் மாணவா்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்யும் நோக்கில், வாரத்தில் ஒரு நாள் ‘புத்தகப் பைகள் இல்லாத நாளாக’ அனுசரிக்கப்படும் என மாநில பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. கணினி, பொது அறிவு, விளையாட்டுகள், உடற்பயிற்சிகள், சுகாதாரத் தகவல்கள், கலைகள் உள்ளிட்டவை குறித்து அந்நாளில் மாணவா்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டுமெனப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய விதிகள் அனைத்தும் மாநிலத்தில் உள்ள 1.30 லட்சம் பள்ளிகளிலும் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பது தொடா்பாக அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்த வேண்டுமென்றும் மாநில கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.