பிரிட்டனின் பிரதமராகியுள்ள லிஸ் ட்ரஸ் யார்?

அந்த சிறுமிக்கு அப்போது ஏழு வயது.

தனது பள்ளியில் நடந்த மாதிரி பொதுத் தேர்தலில் தன்னை மார்கரெட் தாட்சரைப் போல எண்ணிக்கொண்டு போட்டியிட்டார் அந்த சிறுமி.

ஆனால், மார்கரெட் தாட்சர் பெற்றதைப் போன்ற வெற்றியை அந்த சிறுமியால் அப்போது  பெறமுடியவில்லை.

 

அந்தத் தேர்தல் குறித்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு கூர்ந்த அந்த சிறுமி “நான் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தேர்தல் பிரச்சார மேடையில் எனது இதயப்பூர்வமான உரையை நிகழ்த்தினேன், ஆனால் ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை. நானே எனக்கு வாக்களிக்கவில்லை” என்று பேசினார்.

ஆனால், இப்போது அந்த சிறுமி பிரிட்டனின் பிரதமர் ஆகியுள்ளார்.

முப்பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அதே இரும்புப் பெண்மணியின்  வழியைப் பின்பற்றி கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் ஆகும் வாய்ப்பைப் பெற்றுள்ள அந்தச் சிறுமியின் பெயர் லிஸ் ட்ரஸ்.

 

டோரி எம்.பி.க்கள் வாக்களித்த அனைத்து ஐந்து சுற்றுகளிலும் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்கை விட வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் பின்தங்கினார்.

ஆனால், இதை வைத்துச் சூதாடுபவர்கள், இவரின் வெற்றியையே விரும்புகின்றனர். பல ஆண்டுகளாக தொகுதி சங்கங்களுடன் நல்லுறவுகளை உருவாக்கி, போரிஸ் ஜான்சனின் பிரதமர் பதவியின் இருண்ட நாட்களில் அவருக்கு விசுவாசமாக இருந்தார். அதே சமயம், அவர் ஒரு பழைமைவாத டோரி சித்தாந்தத்தைச் சேர்ந்தவரும் அல்ல.

யார் இவர்? இவரது பின்னணி என்ன?

மேரி எலிசபெத் ட்ரஸ் 1975 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டில் பிறந்தார். கணிதப் பேராசிரியரான தனது தந்தை மற்றும் செவிலியரான அவரது தாயார் ஆகியோரை அவர் “இடதுசாரிகள் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு இளம் பெண்ணாக இருக்கும் போதே, அவரது தாயார் அணு ஆயுதக் குறைப்புக்கான பிரசார அமைப்பின் பேரணிகளில் பங்கேற்றுள்ளார். இந்த அமைப்பு, லண்டனுக்கு மேற்கில் உள்ள RAF கிரீன்ஹாம் காமனில் அமெரிக்க அணு ஆயுதங்களை நிறுவ அனுமதிக்கும் தாட்சர் அரசாங்கத்தின் முடிவைக் கடுமையாக எதிர்த்தது.

லிஸ் ட்ரஸ்: அடிப்படைத்தகவல்கள்

வயது : 47

பிறப்பிடம்: ஆக்ஸ்ஃபோர்ட்

வசிப்பிடம்: லண்டன் மற்றும் நார்ஃபோக்

கல்வி: லீட்ஸில் உள்ள ரௌண்ட் ஹே பள்ளி, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம்

குடும்பம்: கணக்காளர் ஹக் ஓ லியரியை மணந்து இள வயது மகள்கள் இருவர்

நாடாளுமன்றத் தொகுதி: தென்மேற்கு நார்ஃபோக்

ட்ரஸ்ஸுக்கு நான்கு வயதாக இருந்தபோது, குடும்பம் கிளாஸ்கோவிற்கு மேற்கே உள்ள பைஸ்லிக்கு குடிபெயர்ந்தது.

பிபிசி ரேடியோ 4 இல் ப்ரொஃபைல் நிகழ்ச்சியில் பேசிய அவரது சகோதரர், தங்கள் குடும்பம் ஃபோர்ட் கேம்ஸ் விளையாடுவதில் ஆர்வம் கொண்டிருந்ததென்றும் இளம் வயதிலேயே ட்ரஸ் தோல்வியை ஏற்க விரும்பியதில்லை எனவும், தோற்கும் நிலை வந்தால், ஒளிந்து கொண்டு விடுவார் என்றும் கூறுகிறார்.

இவரது குடும்பம் பின்னர் லீட்ஸுக்குக் குடி பெயந்தது. அங்கு அவர் மேல்நிலைக்கல்வியை ரவுண்ட் ஹேயில் பயின்றார்.

அவர் அங்கு இருந்த காலத்தில் “தோல்வியடைந்த மற்றும் குறைந்த எதிர்பார்ப்புகளால் கைவிடப்பட்ட குழந்தைகளை” பார்த்ததாக விவரித்துள்ளார்.

 

ரவுண்ட் ஹேயில் அவருடன் படித்த கார்டியன் பத்திரிகையாளர் மார்ட்டின் பெங்கெல்லி உள்ளிட்ட சிலர், பள்ளி பற்றிய அவரது கருத்தை மறுத்துள்ளனர். பெங்கெல்லி எழுதுகிறார்: “ஒருவேளை அவர் தனது வளர்ப்பின் அடிப்படையில், சாதாரண அரசியல் ஆதாயத்திற்காக, பள்ளி மற்றும் ஆசிரியர்கள் குறித்து அவதூறு பரப்புகிறார்”

“அவரது பள்ளிப்படிப்பு எப்படி இருந்தாலும், ட்ரஸ் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்குத் தேர்வானார். அங்கு அவர் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றைப் படித்தார். மாணவர் அரசியலில் தொடக்கத்தில் லிபரல் டெமாக்ரட்டுகளுக்கு ஆதரவாகத் தீவிரமாக ஈடுபட்டார்.

கட்சியின் 1994 மாநாட்டில், முடியாட்சியை ஒழிப்பதற்கு ஆதரவாக அவர் பேசினார், பிரைட்டனில் உள்ள பிரதிநிதிகளிடம் கூறினார்: “நாங்கள் தாராளவாத ஜனநாயகவாதிகள் அனைவருக்குமான வாய்ப்பில் நம்பிக்கை கொண்டுள்ளோம். ஆளப் பிறந்த இனம் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை”

வெஸ்ட்மின்ஸ்டர் லட்சியங்கள்

ஆக்ஸ்போர்டில், ட்ரஸ் கன்சர்வேடிவ் கட்சிக்கு மாறினார்.

பட்டம் பெற்ற பிறகு ஷெல், கேபிள் & வயர்லெஸ் நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்தார், மேலும் 2000 ஆம் ஆண்டில் சக கணக்காளரான ஹக் ஓ லியரியை மணந்தார்.

 இத்தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

2001 பொதுத் தேர்தலில் வெஸ்ட் யார்க் ஷயரில் உள்ள ஹெம்ஸ்வொர்த் தொகுதியின் டோரி கட்சி வேட்பாளராகத் தேர்தலில் களம் கண்டி தோல்வியடைந்தார். 2005 இல் வெஸ்ட் யார்க் ஷயரின் கால்டர் வேலியில் மற்றொரு தோல்வியைச் சந்தித்தார்.

லிஸ் டிரஸ் 2010-ஆம் ஆண்டு எம்பி ஆனார்

ஆனால், அவரது அரசியல் அபிலாஷைகள் குறையாமல், 2006 இல் தென்கிழக்கு லண்டனில் உள்ள கிரீன்விச்சில் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் 2008 முதல் ரைட்-ஆஃப்-சென்டர் ரிஃபார்ம் என்ற சிந்தனைக் குழுவிலும் பணியாற்றினார்.

கன்சர்வேடிவ் கட்சித்தலைவர் டேவிட் கேமரூன் 2010 தேர்தலுக்கான முன்னுரிமை வேட்பாளர்களின் “A-பட்டியலில்” ட்ரஸ்ஸை சேர்த்தார், மேலும் அவர் பாதுகாப்பான தென்மேற்கு நார்ஃபோக் தொகுதியில் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு டோரி எம்பி மார்க் ஃபீல்டுடன் அவருக்குத் தொடர்பு இருந்தது தெரியவந்ததை அடுத்து, ‘தொகுதி டோரி அசோசியேஷன் (constituency Tory association)’ லிருந்து அவர் நீக்கப்படுவதற்கான போராட்டத்தையும் எதிர்கொள்ள நேர்ந்தது.

ஆனால், அவரை வெளியேற்றுவதற்கான முயற்சி தோல்வியடைந்ததுடன் ட்ரஸ் 13,000 வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2010 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற நான்கு கன்சர்வேடிவ் எம்.பி.க்களுடன் பிரிட்டானியா அன்ச்செய்ன்ட் (Britannia Unchained) என்ற புத்தகத்தை அவர் இணைந்து எழுதினார், இது உலகில் இங்கிலாந்தின் நிலையை உயர்த்துவதற்காக மாநில ஒழுங்குமுறைகளை திரும்பப் பெற பரிந்துரைத்தது. டோரி தரப்பில் தடையில்லாச் சந்தையைப் பரிந்துரைக்கும் மிகப்பெரிய தலைவராக இவர் உருவானார்.

பிபிசி தலைமைத்துவ விவாதம் ஒன்றின்போது, பிரிட்டானியா அன்செய்ன்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு கருத்து குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. பிரிட்டிஷ் தொழிலாளர்களை “உலகின் மிக மோசமான செயலற்றவர்கள்” என்று அதில் விவரித்திருந்தார். அதைத் தான் எழுதவில்லை என்று அவர் மறுத்தார்.

2012 இல், எம்.பி ஆன இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் கல்வி அமைச்சராக அரசாங்கத்தில் பங்காற்றத் தொடங்கினார். 2014 இல் சுற்றுச்சூழல் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றார்.

2015 கன்சர்வேடிவ் மாநாட்டில், ட்ரஸ் அவரது ஒரு பேச்சுக்காகப் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானார். அதில் அவர் உணர்ச்சிவசப்பட்ட குரலில் கூறிய கருத்து: “நாங்கள் எங்கள் பாலாடைக்கட்டியில் மூன்றில் இரண்டு பங்கை இறக்குமதி செய்கிறோம். அது ஒரு அவமனம்”

ப்ரெக்சிட் யூ-டர்ன்

அடுத்த ஓராண்டு காலத்திற்குள் ஒரு தலைமுறையின் மிகப்பெரிய அரசியல் நிகழ்வு நடந்தேறியது – ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கமாக இருப்பது குறித்த வாக்கெடுப்பு.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றித்துடன் இணைந்திருப்பதை ட்ரஸ் ஆதரித்தார். சன் செய்தித்தாளில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தகம் செய்யும் போது அதிக விதிமுறைகள், அதிக படிவங்கள், அதிக தாமதங்கள் என்ற மும்முனைச் சிக்கல் ஏற்படும்” என்று எழுதினார்.

யுக்ரேன் படையெடுப்புக்கு சில வாரங்களுக்கு முன்பு, லிஸ் டிரஸ் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோஃப் உடன் ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

இருப்பினும், தனது தரப்பு தோற்ற பிறகு, அவர் தனது மனதை மாற்றிக்கொண்டார். அதன்பிறகு, “விவகாரங்களின் செயல்படும் விதத்தை மாற்ற” ப்ரெக்ஸிட் ஒரு வாய்ப்பை வழங்கியதாக வாதிட்டார்.

பிரதமர் தெரசா மேயின் தலைமையின் கீழ், அவர் நிதித் துறை முதன்மைச் செயலராகப் பொறுப்பேற்கும் முன்பு, நீதித்துறை செயலாளராக பணியாற்றினார்.

2019 இல் போரிஸ் ஜான்சன் பிரதமரானபோது, ட்ரஸ் சர்வதேச வர்த்தகச் செயலாளராகப் பொறுப்பேற்றார். இப்பொறுப்பு, UK PLC ஐ மேம்படுத்துவதற்காக உலகளாவிய அரசியல் மற்றும் வணிகத் தலைவர்களைச் சந்திப்பதைக் குறிக்கிறது.

2021 இல், 46 வயதில், அவர் அரசாங்கத்தின் மிக மூத்த பணிகளில் ஒன்றிற்கு மாறினார். வெளியுறவுச் செயலாளராக டொமினிக் ராப்புக்கு அடுத்தபடியாகப் பொறுப்பேற்றார்.

இந்தப் பொறுப்பில், அவர் வடக்கு அயர்லாந்து நெறிமுறையின் சிக்கல் முடிச்சை அவிழ்க்க முயற்சி செய்து, பிரெக்சிட்டிற்கு பிந்தைய EU-UK ஒப்பந்தத்தின் சில பகுதிகளை அகற்றினார்.

இந்த நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக விமர்சித்தது.

கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பிரிட்டிஷ்-ஈரானிய பிரஜைகளின் விடுதலையை அவர் உறுதி செய்தார்.

பிப்ரவரியில் ரஷ்யா, யுக்ரேனை ஆக்கிரமித்தபோது, விளாடிமிர் புதினின் அனைத்துப் படைகளும் நாட்டை விட்டு விரட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தார்.

ஆனால் யுக்ரேனில் போராட விரும்பும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களை ஆதரித்ததற்காக அவர் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

‘நிதியுதவிகளுக்கு எதிர்ப்பு’

கட்சித் தலைமைக்கான ட்ரஸ்ஸின் பிரச்சாரம் சர்ச்சையில் சிக்கியது.

வாழ்க்கைக்கான செலவின நெருக்கடியை எப்படிச் சமாளிப்பது என்று எழுப்பபப்ட்ட கேள்விக்கு அவர், “வரிச் சுமையைக் குறைப்பதில் கவனம் செலுத்துவதாகவும் நிதியுதவிகள் வழங்குவதைக் குறைப்பதாகவும்” கூறினார்.

லண்டனுக்கு வெளியே உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியத்திற்கு வித்திடும் என்ற காரணம் காட்டிய மூத்த டோரிகளின் எதிர்ப்பால், பொதுத்துறை ஊதியத்தை பிராந்திய வாழ்க்கைச் செலவுகளுடன் இணைக்கும் திட்டத்தை அவர் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மேலும் அவர் ஸ்காட்லாந்தின் முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜனை “கவனம் தேடுபவர்” என்று கூறி, “அவரைப் புறக்கணிப்பது” சிறந்தது என்றும் கூறினார்.

இருப்பினும், அவர் தனது போட்டியாளரான ரிஷி சுனக்கை விட கட்சி உறுப்பினர்களிடையே பிரபலமானவர் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ட்ரஸ், தான் அணியும் ‘ஃபர் தொப்பி’ மற்றும் ‘வெள்ளை பௌ’ போன்ற ஆடை அலங்காரங்களின் மூலம் டோரிக்களுக்கு விருப்பமான தாட்சரைப் பின்பற்ற முயற்சிக்கிறார் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ட்ரஸ் இதை நிராகரித்தார், ஜிபி நியூஸிடம் அவர், “பெண் அரசியல்வாதிகள் எப்போதும் மார்கரெட் தாட்சருடன் ஒப்பிடப்படுவது மிகவும் வெறுப்பாக இருக்கிறது, அதே நேரத்தில் ஆண் அரசியல்வாதிகள் டெட் ஹீத்துடன் ஒப்பிடப்படுவதில்லை.” என்று கூறினார்.

ஆனால் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதில், இத்தகைய ஒப்பீடுகள் ஒரு வெளிப்படையான பாதகமாக இல்லாது போனது.
பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகுவதாக அறிவித்தபின் தங்கள் அடுத்த தலைவரை தேர்ந்தடுக்கும் பணிகளை கன்சர்வேட்டிவ் கட்சியினர் தொடங்கினர். அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை வீழ்த்தி போட்டியில் வென்றுள்ளார் லிஸ்.

– பீபீசி தகவல் வழி தொகுக்கப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.