ஒடிசாவில் ஆண்களை விட பெண் குழந்தைகளை தத்தெடுக்க ஆர்வம் காட்டும் மக்கள்: ஆய்வில் தகவல்

பல மாநிலங்களில் பெண் குழந்தைகள் விகிதம் குறைந்து வரும் இச்சமயத்தில், ஒடிசாவில் உள்ள குழந்தை இல்லாத தம்பதிகள், ஆண் குழந்தைகளை விட, பெண் குழந்தையை தத்தெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குழந்தை தத்தெடுப்பு குறித்த கடந்த ஐந்து ஆண்டுகளின் தரவு (2017 முதல் 2021 வரை) படி ஒடிசாவிலிருந்து மொத்தம் 869 குழந்தைகளை ஒடிசா, வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தம்பதிகள் தத்தெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒடிசாவில் இருந்து 581 பெண் குழந்தைகளை இந்தியா மற்றும் வெளிநாட்டு தம்பதிகள் தத்தெடுத்துள்ளனர். தத்தெடுக்கப்பட்ட ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 288 ஆக உள்ளது, இது தத்தெடுக்கப்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவானதாகும்.

மொத்த எண்ணிக்கையில், 704 குழந்தைகள் இந்தியாவில் உள்ள தம்பதிகளால் தத்தெடுக்க பட்டுள்ளனர். 2017 மற்றும் 2021 க்கு இடையில் 165 குழந்தைகள் வெளிநாட்டினரால் தத்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஒடிசாவின் 30 மாவட்டங்களில் 24 மாவட்டங்களில் இருந்து மட்டும் 462 பெண் குழந்தைகளையும், 242 ஆண் குழந்தைகளையும் இந்திய தம்பதிகள் தத்தெடுத்துள்ளனர். வெளிநாட்டவர்கள் ஒடிசாவின் 17 மாவட்டங்களில் இருந்து 119 பெண் குழந்தைகள், 46 ஆண் குழந்தைகளை தத்தெடுத்துள்ளனர்.

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சுந்தர்கர் மாவட்டத்தில் இருந்து அதிகபட்சமாக 119 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். அதையடுத்து கியோஞ்சார், கட்டாக் மற்றும் குர்தா ஆகிய மாவட்டங்களில் அதிக அளவுகளில் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பல சமயங்களில், ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக, மக்கள் பெண் குழந்தைகளை குப்பை தொட்டி, சாலைகள் போன்றவற்றில் விட்டுச் செல்வதை கேட்டிருப்போம். அந்த பெண் குழந்தைகள் குழந்தை பராமரிப்பு இல்லங்களுக்கு கொண்டு வந்து பின்னர் குழந்தைகள் இல்லாத பெற்றோரால் தத்தெடுக்கப்படுகின்றனர். அதனால்தான் தத்தெடுக்கப்பட்ட பெண் குழந்தைகள் அதிகமாக உள்ளனர் என்று ஒடிசா குழந்தை பராமரிப்பு மையங்கள் தெரிவிக்கின்றன.

மாநில தத்தெடுப்பு வள முகமையின் (SARA) மூத்த அதிகாரிகள் இது தொடர்பாக கூறுகையில், ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருவரும் தத்தெடுக்கப்படுகிறார்கள். இருப்பினும், தத்தெடுக்கும் தம்பதிகள் ஆணை விட பெண்ணைத் தத்தெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் ஒரு சிலர் சிறப்புத் தேவையுடைய குழந்தைகளைத் தத்தெடுக்க முன்வருவதாக தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள், பெண் குழந்தைகளை அதிகம் தத்தெடுத்துள்ளனர்.

தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு, குறிப்பாக பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றித் தெரிவித்த அதிகாரி, குழந்தையை ஒரு தனி ஆணோ, பெண்ணோ தத்தெடுக்க முடியாது என்பது போன்ற தத்தெடுப்புக்கான தகுதி அளவுகோல்கள் குறித்து விரிவான வழிகாட்டுதல்கள் உள்ளன என்றார்.

இந்தியாவில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளை கண்காணிக்க மாநில மற்றும் தேசிய அளவில் முறையான வழிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது, தவிர, இந்திய தூதர்கள் மற்றும் வெளிநாட்டு தத்தெடுப்பு முகமைகள் தத்தெடுப்பு செயல்முறையை மேற்பார்வையிடுகின்றன மற்றும் வெளிநாடுகளில் உள்ள குழந்தைகளை கண்காணித்து வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.