இரு ராஜபக்சக்களும் பதவி விலகியது தவறு – ‘மொட்டு’க் கட்சி கூறுகின்றது.

“ராஜபக்சக்களின் அரசியல் வகிபாகம் நாட்டுக்குத் தேவை என்ற நிலைப்பாட்டிலேயே பெரும்பாலான இலங்கையர்கள் இன்றும் உள்ளனர். எனவே, ராஜபக்சக்கள் பதவி விலகி இருக்கக்கூடாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாக உள்ளது” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போது அவர் மேலும் கூறியதாவது:-

“ராஜபக்சக்கள் தாம் வகித்த பதவிகளில் இருந்து விலகியது தவறு என்பதே நான் உட்பட எமது கட்சியில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களின் கருத்தாக உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு 69 இலட்சம் பேர் வாக்களித்தனர். எனவே, அவரைப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் அம்மக்களுக்கே காணப்படுகின்றது. மாறாக வீதியில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தவர்களுக்கு அந்த அதிகாரம் கிடையாது.

அவரை நீக்கும் அதிகாரம் அந்த மக்களுக்கே உள்ளது. மாறாக வீதிக்கு இறங்கும் ஒரு இலட்சம் பேரால் அதைச் செய்ய முடியாது.

மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்குவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைத்தது. எனவே, அவர் பதவி விலகியதும் தவறு.

இந்நாட்டில் மக்கள் ஆசியுடன்தான் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். பலவந்தமாக வந்ததில்லை.

எமது கட்சி மக்களுடன்தான் உள்ளது. நாம் மக்கள் மத்தியில் செல்வோம். ராஜபக்சக்களின் தேசிய அரசியல் அவசியம் என்ற நிலைப்பாட்டிலேயே பெரும்பாலான மக்கள் உள்ளனர்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.