வடக்கில் சீனாவின் ஆக்கிரமிப்பு உச்சம் – சபையில் சிறிதரன் குற்றச்சாட்டு.

வடக்கில் சீனாவால் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பிள்ளைகள் மற்றும் தாய்மாரின் மந்தபோஷனை தொடர்பில் யுனிசெப் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த 30ஆண்டுகளுக்கும் மேலாக, போர் முடிந்தும் 12 ஆண்டுகளுக்கும் மேலாக வடக்கு, கிழக்கிலே வாழ்கின்ற குழந்தைகள் போஷாக்கின்மையோடுதான் பிறந்திருக்கின்றார்கள், வாழ்ந்திருக்கின்றார்கள்.

இலங்கை அரசுகள் விதித்த மோசமான பொருளாதார தடைகளால்தான் தமிழர்கள் போஷாக்கற்றவர்களாக வாழ்ந்தார்கள். உரங்கள், எரிபொருட்கள், போஷாக்கு உணவுகள் அனுப்பப்படவில்லை.

இதனால் எத்தனையோ குழந்தைகள் போஷாக்கின்மையால், பட்டினியால் இறந்தார்கள்.

இந்தக் காலத்தைப்பற்றி சற்று சிந்தியுங்கள். திட்டமிட்டு தமிழர்கள் மீது இலங்கை அரசுகள் பொருளாதார தடைகளை விதித்தபோது எவ்வளவு தூரம் தமிழர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை இப்போது சிங்கள சகோதரர்கள் பார்க்கக்கூடியதாக இருக்கும்.

வடக்கில் கடலட்டை பண்ணைகள் என்ற பெயரில் சீனாவால் பெருமளவு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. சீனாவின் இந்தச் செயற்பாடுகள் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகமாக மக்களைப் பாதிக்கின்றன.

அழிக்கப்பட்டுள்ள, படுகொலைசெய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் தொடர்பில் ஜெனிவாவில் பிரேரணை வருகின்றபோது இலங்கைக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டிருக்கும் சீனா இன்னொரு புறத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற தமிழ் இளைஞர்களின் கல்விக்குத் தான் 5 ஆயிரம் ரூபா பணம் கொடுப்பதை பெரிய விடயமாகக் காட்டுகின்றது. மீனவர்களுக்கு 4 ஆயிரம் ரூபா கொடுப்பதை பெரிய செய்தியாக்குகின்றது. ஆனால், நாம் செத்துக்கொண்டிருக்கின்றோம்.

நாம் போஷாக்கின்மையாலும் சாகின்றோம். வாழ்வாதாரமின்றியும் சாகின்றோம். எங்களின் நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கின்றது.

இலங்கையின் அமைதியின்மையில் சீனாவின் மறைக்கரங்கள் இன்னும் இன்னும் அகோரமாக இருக்கின்றது. இது மிகவும் மோசமானது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.