சுற்றுலா அபிவிருத்தியின் பெயரால் திருக்கோணேஸ்வரம் கோயில் காணியை ஆக்கிரமிக்க முயற்சி!

ஈழத்தின் தொன்ம வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரம் ஆலயம் அமைந்துள்ள – ஆலயத்துக்குச் சொந்தமான காணியை உல்லாசத்துறை அபிவிருத்தியின் பெயரால் ஆக்கிரமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆக்கிரமிப்புத் திட்டத்துக்கு வழமைபோன்று தொல்பொருள் திணைக்களத்தினரும் கிழக்கு மாகாண ஆளுநரும் ஆதரவளிக்கின்றனர் என்று ஆலய பரிபாலன சபையினர் தெரிவிக்கின்றனர்.

இதேசமயம், திருக்கோணேஸ்வரர் ஆலய பகுதியைச் சுற்றுலா அபிவிருத்திக்கு உள்வாங்குவதற்கும் இதற்காக ஆலய காணியைச் சுவீகரிக்கவும் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எதிர்ப்பு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இதற்கு அந்த மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் இரு வருடங்களுக்கும் மேலாக மாவட்டத்துக்கு வருகை தரவில்லை என்பதும் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் அவர் பங்கேற்பதில்லை என்றும் கூறப்படுகின்றது.

இதேவேளை, ஆலயத்துக்குச் சொந்தமான 18 ஏக்கர் காணிக்குள் உல்லாசத்துறை திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஆலய பரிபாலன சபையினருக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழரின் தொன்மை நிறைந்த – பாடல் பெற்ற சிறப்புப் பெற்ற திருக்கோணேஸ்வரர் ஆலயத்தைப் பாதுகாப்பதற்கு அனைத்து தமிழ் மக்களும், இந்து மக்களும் முன்வரவேண்டும் என்றும் ஆலயத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.