டெல்லியில் திடீரென இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம் – மீட்பு பணிகள் தீவிரம்!

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுக்குள் சிக்கிய 6 பேரை மீட்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டெல்லியில் ஆசாத் மார்க்கெட் பகுதியில் ஷீஷ் மஹால் அருகே, புதிதாக 4 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டு வந்தது. இன்று காலை 8.30 மணியளவில் திடீரென அந்த கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில், கட்டட வேலையில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் இடிபாடுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.

இந்த விபத்தில், 5 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், 6 தொழிலாளர்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். விபத்து ஏற்பட்ட இடம் குறுகலான பகுதி என்பதால், ஜேசிபி உட்பட மீட்பு வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் கட்டடம் அதிக எடை கொண்டது என்பதால் இடிந்து விழுந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் இடிபாடுக்குள் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.