விநாயகர் சிலை கரைக்கும் போது விபரீதம் – ஹரியானாவில் 7 பேர் நீரில் மூழ்கி பலி

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், நேற்று மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பீகார், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வு நடைபெற்றது. ஹரியானா மாநிலத்தில் விநாயகர் சிலை கரைப்பின் போது இரு வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்தில் 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

அங்குள்ள சோனிபேட் பகுதியின் மிமார்பூர் காட் என்ற இடத்தில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. அப்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் உறவினர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இவர்களின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல், மகேந்திரகர் பகுதியில் உள்ள கால்வாயில் கிராம மக்கள் விநாயகர் சிலையை கரைக்க சென்றனர். அப்போது ஆற்றில் அடித்து செல்லப்பட்டு ஒன்பது பேர் நீரில் மூழ்கியுள்ளனர். இதில் எட்டு பேர் இதுவரை மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட 8 பேரில் நால்வர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்தும் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில் இது போன்ற துக்க சம்பவம் ஏற்பட்டதற்கு ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். தொலைந்த ஒருவரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது எனவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு துணை நின்று வேண்டிய உதவிகளை செய்யும் என உறுதியளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.