பெரியார் சிலைக்கு கீழ் கடவுள் மறுப்பு வாசகம்.. தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் பெரியார் சிலைக்கு கீழ் இருக்கும் கடவுள் மறுப்பு வாசகம் தொடர்பான மனு மீது பதிலளிக்க தமிழகம் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

தமிழத்தின் பெரும்பாலான இடங்களில் பெரியார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழ், அவர் கூறிய கடவுள் மறுப்பு வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த கடவுள் மறுப்பு வாசகத்தை நீக்க வேண்டும் என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், பெரியார் சிலையின் கீழுள்ள வாசகங்கள், பெரும்பாலான மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், இந்தியாவின் மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக உள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன், ‘‘பெரியார் சிலை விவகாரத்தில் அதன் பராமரிப்புக்காக தமிழக அரசு தரப்பில் தொகை ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. எனவே பேச்சுரிமை, கருத்துரிமை என்ற அடிப்படையில் மனதை புண்படுத்தும் வாசகங்களை அனுமதிக்க கூடாது’’ என தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதி எஸ்.கே.கவுல், ‘‘இந்த விவகாரத்தில் நாங்கள் இரு தரப்பு வாதங்களையும் கேட்க விரும்புறோம். அதனால் தமிழக அரசு இதுகுறித்து பதிலளிக்க வேண்டும்’’ என நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.