மகாராணியின் இறுதி சடங்கு பூரண அரச மரியாதையுடன்…… (Video)

ஐக்கிய இராச்சியத்தை மிக நீண்ட காலம் (70 வருடங்கள்) ஆட்சி செய்தவர் என்ற பெருமைக்கு உரிய, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு, பூரண அரச மரியாதையுடன் இலண்டன் வெஸ்ட்மினிஸ்டர் அபேயில், இன்று (19) பிற்பகல் இடம்பெற்றது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட 500 மேற்பட்ட வெளிநாட்டுத் தலைவர்களும் வெளிநாடுகளின் முக்கிய பிரதிநிதிகளும் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டதுடன், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் மகாராணியில் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.

தனது பாரியார் மைத்ரீ விக்கிரமசிங்க மற்றும் இலங்கைத் தூதுவருடன் மகாராணிக்கு ஞாயிற்றுக்கிழமை (18) இரவு வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையில் வைத்து, ஜனாதிபதி ரணில், இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தார்.

கடந்த செப்டம்பர் 8 ஆம் திகதியன்று, தனது 96 வயதில் பால்மோரலில் காலமான மகாராணியின் பூதவுடல், கடந்த புதன்கிழமை முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நாள் முதல், 10 மணிநேரத்துக்கும் மேல் காத்திருந்து, ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.

வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையிலிருந்து இன்று (19), வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு படைகள் புடைசூழ ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட மகாராணியின் பூதவுடல் தாங்கிய பேழைக்கு, புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் வைத்து ஆராதனைகள் நடத்தப்பட்டன.

குடும்பத்தினர் மட்டும் பங்கு பெறும் ஒரு ஜெபத்துக்குப் பிறகு, புனித ஜார்ஜ் தேவாலயத்துக்குள் இடம் பெற்றுள்ள ஆறாம் ஜார்ஜ் நினைவு தேவாலயத்தில் தனது கணவர் எடின்பரோ கோமகனுடன் ராணி ஒன்றாகப் புதைக்கப்படுவார்.

பிறகு ராணியின் உடல் ராயல் வால்ட்டில் இறக்கப்படும். ராணியின் பைப்பர் இசைப்பார். பிறகு, ‘தேவனே அரசனை காப்பாற்று’ என்ற கீதம் பாடப்படும். விண்ட்சர் கோட்டையில் பைப்பர் கீதம் இசைக்கவேண்டும் என்பது ராணியே தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்ட கோரிக்கை என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவரது கல்லறையின் மேலே பதிப்பிக்கப்படும் கல்லில் ‘ELIZABETH II 1926-2022’ என்று பொறிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.