22 ஆவது திருத்தத்துக்கு எதிராக 24 ஆம் திகதி ஒன்றிணையுங்கள்! – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அழைப்பு.

அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் ஊடாக ஜனாதிபதியும் அரசாங்கத்தின் பெரும்பான்மையும் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை மீறுவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசின் ஜனநாயக விரோத போக்கைத் தோற்கடிக்க எதிர்வரும் 24 ஆம் திகதி காலை கொழும்பு – பொல்துவ சந்தியில் ஒன்றிணையுமாறும் மக்களிடம் பகிரங்கக் கோரிக்கை விடுத்தார்.

இளம் பெண் சட்டத்தரணிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டின் ஜனநாயக முறையானது சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களின் அதிகாரப் பகிர்வு மற்றும் அவற்றுக்கிடையிலான தடைகள் மற்றும் சமன்பாடுகளின் அடிப்படையிலேயே பாதுகாக்கப்படுகின்றது என்று குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய 22 ஆவது திருத்தச் சட்டம் மூலம் இந்த ஜனநாயகத்துக்கு மரண அடி கொடுக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

நிறைவேற்று அதிகாரத் தூணின் ஜனாதிபதியும் பெரும்பான்மைப் பலம் கொண்ட சட்டவாக்கமும் நாட்டின் நீதி அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி, நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் அடிமையாக்கும் கீழ்தரமான முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், அரசமைப்பின் 3, 4, 83, 107 ஆம் பிரிவுகளின்படி, சர்வஜன வாக்கெடுப்பு இன்றி 22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமாயின் அது மக்களின் இறையாண்மையையும் வாக்களிக்கும் உரிமையையும் மீறும் செயலாகும் என்றார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுக்குத் தீர்வு, ஊழல் மற்றும் மோசடிகளுக்குத் தண்டனை போன்ற கோஷங்களை முன்னிறுத்தி, நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இல்லாது செய்து நாட்டில் தனிக்கட்சி ஆட்சியை ஸ்தாபிக்க அரசு முயல்கின்றது எனத் தெரிவித்த சஜித் பிரேமதாஸ, இதன் மூலம் ஜே.வி.பி. தவிர வேறு எவருக்கும் அரசியல் சுதந்திரமோ, பேச்சுரிமையோ இல்லாத நிலையை ஏற்படுத்தி, மக்களை அரசின் நிரந்தர அடிமைகளாக்கும் உள்நாட்டு அடிமைத்துவ யுகத்தை நோக்கி அரசு நகர்வதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் வறுமை அதிகரித்து, வாழ்க்கைச் செலவு உயர்ந்து, நேரடி வெளிநாட்டு முதலீடுகள் குறைந்துள்ள இந்தச் சூழலில், 2027 ஆம் ஆண்டு ஐ.எம்.எவ். ஒப்பந்தம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில், இவற்றுக்கான தீர்வாகத்தான் 22 ஆவது திருத்தச் சட்டம் அமைந்துள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

எனவே, தனிக்கட்சி ஆட்சியை நோக்கிய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைத் தோற்கடிப்பதற்காக, எதிர்வரும் 24 ஆம் திகதி காலை கொழும்பு – பொல்துவ சந்தியில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்துத் தரப்பினரையும் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.