வடக்கு மாகாண விளையாட்டு விழா யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பம்!

“உடல் மற்றும் உள மேம்பாட்டுக்கு விளையாட்டுக்கள் அவசியமானவை. அதேவேளை, தலைமைத்துவப் பண்பு மற்றும் சகோதரத்துவ உணர்வை வளர்த்தெடுப்பதற்கும் விளையாட்டுத்துறை முக்கிய பங்காற்றுகின்றது.” – என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 18 ஆவது வடக்கு மாகாண விளையாட்டு விழா இன்று சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விளையாட்டு விழாவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்கள் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டு விளையாட்டரங்குக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றதுடன், தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றி வைத்தார். பின்னர் விளையாட்டு வீர வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டதுடன், விளையாட்டு வீரர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வும் இடம்பெற்றது. தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநரால் 18 ஆவது மாகாண விளையாட்டு விழா உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது.

பிரதம விருந்தினர் உரையில் ஆளுநர், விளையாட்டுக்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், மன உறுதியையும் வளர்ப்பதாகத் தெரிவித்தார். மேலும், விளையாட்டின் மூலம் ஒருவருக்கொருவர் மதிப்பளித்தல், இணைந்து செயற்படுதல், தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் சகோதரத்துவ உணர்வுடன் செயற்படுதல் போன்ற பல்வேறு பண்புகளை வளர்த்துக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்தின் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காகப் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்த ஆளுநர், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் மாகாணத்தின் விளையாட்டுத் துறையின் பெறுபேறுகள் முன்னேற்றப் பாதையில் சென்று வருகின்றன என்றும் தெரிவித்தார்.

மாகாண மட்டத்தில் சிறப்பாகச் செயற்பட்டு வரும் வீர வீராங்கனைகள் எதிர்காலத்தில் தேசிய மட்டத்திலும் சாதனைகளை நிலைநாட்ட வேண்டும் என்று வாழ்த்துத் தெரிவித்த ஆளுநர், அவர்களின் திறமைகள் மேலும் வளர்ச்சியடைய தேவையான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து நடப்பு ஆண்டில் நடைபெற்ற மாகாண மட்டப் பெருவிளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாவட்டங்களுக்கான பரிசில்கள் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டன.

இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த விளையாட்டு விழாவின் தொடக்க நாளான இன்று, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன், கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் மற்றும் வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் க.ஏகாந்தன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த வீர வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.