பசிலின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் அமெரிக்கா சென்ற முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்க்ஷ இலங்கையுடனான அனைத்து உறவுகளையும் விட்டு விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது தொலைபேசி எண்ணை மாற்றி அமெரிக்காவில் தனியாக வசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பசில் ராஜபக்க்ஷவுடன் நெருக்கமாகப் பணியாற்றுபவர்கள் கூட அவரைத் தொடர்புகொள்ள முடியாத நிலையில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கோட்டாபய ராஜபக்ச பதவியை விட்டு வெளியேறி புதிய ஜனாதிபதியை நியமித்ததன் மூலம் ராஜபக்ச குடும்பத்திலும், பசில் ராஜபக்சவின் கட்சியாக இருந்த பொதுஜன பெரமுனவிலும் சில நெருக்கடிகள் உருவாகி, பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதில் கூட பசில் ராஜபக்க்ஷ கடுமையாக போராட வேண்டியிருந்தது.

தற்போதைய அமைச்சரவையில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் பசில் அனுதாபிகள் அல்ல, அமெரிக்கா செல்வதற்கு முன்னர், பசில் அவரது அனுதாபிகள் குழுவிலிருந்தோரை அமைச்சரவையில் சேர்க்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

இந்நிலைமையின் அடிப்படையில் குறிப்பிட்ட காலத்துக்கு அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க பசில் ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

எவ்வாறாயினும், அவரால் நீண்ட காலம் அப்படி இருக்க முடியாது எனவும், ராஜபக்ச குடும்பமும், பொதுஜன பெரமுனவும் மீண்டும் எழுச்சி பெற வேண்டுமாயின் பசிலின் தலையீடு கட்டாயம் தேவை என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.