நானே வருவேன் சினிமா விமர்சனம்.

நடிகர் தனுஷ் இரட்டை பிறவி. அண்ணன் கதிர் வித்தியாசமான குணம் கொண்டவர், தம்பி பிரபு சாந்தமானவன். சிறுவயதில் இருக்கும் போது கதிர் தனது தந்தையை கொலை செய்ததால், அவரை விட்டு பிரிந்து தம்பி பிரபுவுடன் தாய் வாழ்கிறார்.

அதன்பின் பிரபு வளர்ந்து பெரியவனாக மாறி, மனைவி இந்துஜா மற்றும் மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அமானுஷ்ய சக்தியுடன் மகள் பேச ஆரம்பிக்கிறார். இதை கண்டறியும் தனுஷ், மகளை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், அதற்குள் அந்த சக்தி மகள் உடலுக்குள் புகுந்து பிரபுவை அண்ணன் கதிரை கொலை செய்ய தூண்டுகிறது.

இறுதியில் பிரபு, அண்ணன் கதிரை கொலை செய்தாரா? கதிர் எங்கே இருக்கிறார்? அந்த அமானுஷ்ய சக்தி யார்? கதிரை கொலை செய்ய சொல்ல காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

பிரபு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் தனுஷ், பொறுப்புள்ள தந்தையாக ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மகள் மீது பாசம் காட்டுவது, வருந்துவது, காப்பாற்ற நினைப்பது என்று நடித்து கண்கலங்க வைத்திருக்கிறார். கதிர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் தனுஷ் மிரட்டலான நடிப்பை கொடுத்து இருக்கிறார். இரண்டு கதாபாத்திரத்திற்கும் வித்தியாசம் காண்பித்து தான் ஒரு நடிப்பு அசுரன் என்பதை நிரூபித்திருக்கிறார் தனுஷ்.

மனைவியாக நடித்து இருக்கும் இந்துஜா, கணவன், மகள் பாசத்திற்காக ஏங்குபவராக நடித்து கவர்ந்து இருக்கிறார். பிரபு, யோகி பாபு, செல்வராகவன் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள். மகளாக நடித்து இருக்கும் ஹியா தவே சிறப்பான நடிப்பை கொடுத்து கைத்தட்டல் பெறுகிறார்.

வித்தியாசமான கதையை வைத்து அப்பா மகள் பாசம், அண்ணன் தம்பி, அப்பா மகன் பாசம் என திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். முதல் பாதி திரில்லராகவும் இரண்டாம் பாதி ஆக்சனாகவும் திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். இவரது பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.