5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.. சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் முதற்கட்டமாக வருகிறது!

6வது இந்திய கைபேசி மாநாட்டில் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதற்கட்டமாக டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்பட 13 இடங்களில் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்து வைத்தார்.

5ஜி தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல், வோடஃபோன் ஐடியா நிறுவன தலைவர் ரவிந்தர் தாக்கூர் ஆகியோர் பிரதமர் மோடியுடன் பங்கேற்றனர்.

முன்னதாக நிகழ்வு இடத்தில் இருந்த ரிலையன்ஸ், ஏர்டெல், வோடாபோன் ஆகிய அரங்குகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். பிரதமரிடம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவைகள் குறித்து விளக்கி டெமோ காட்டினார்.

அதேபோல், ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்களும் தங்கள் சேவையின் சிறப்பம்சங்கள் குறித்து பிரதமரிடம் விளக்கினார்.

பின்னர் நாட்டில் முதல்கட்டமாக 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். இன்றைய தினம் இந்திய தொலைத்தொடர்பு வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தினம் என்றும் டிஜிட்டல் இந்தியாவின் அடித்தளம் தொலைத்தொடர்பு துறை மூலம் தான் அமைக்கப்படுகிறது என அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். நிகழ்வில் பேசிய ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி 2023க்குள் நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் 5ஜி சேவை கொண்டு சேர்க்கப்படும் என உறுதி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.