இத்தாலியின் எதிர்காலம் எத்திசை நோக்கி? : சண் தவராஜா

ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடான இத்தாலியில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் வலதுசாரிக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான காலகட்டத்தில் இத்தாலியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவுள்ள முதலாவது தீவிர வலதுசாரி அரசாங்கமாக இது உள்ளது. அது மாத்திரமன்றி, இத்தாலியின் தலைமை அமைச்சராக முதன் முறையாக பெண் ஒருவர் பொறுப்பேற்க உள்ளதாலும் இந்தத் தேர்தல் முடிவுகள் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன.

செப்டெம்பர் 25ஆம் திகதி நடைபெற்று முடிந்த தேர்தலில் ஜோர்ஜியோ மெலனி தலைமையிலான இத்தாலியின் சகோதரர்கள் கட்சி 26 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. இந்தக் கட்சியோடு இணைந்து தேர்தல் கூட்டணியில் போட்டியிட்ட மற்றியோ சல்வினி தலைமையிலான லீக் கட்சி 8.78 விழுக்காடு வாக்குகளையும், மேனாள் தலைமை அமைச்சரான சில்வியோ பெர்லுஸ்கோனி தலைமையிலான போர்சா இத்தாலி கட்சி 8.12 விழுக்காடு வாக்குகளையும் பெற்றுள்ளன. 43 விழுக்காடுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற இந்தக் கூட்டணி நவம்பர் மாத நடுப் பகுதியில் புதிய ஆட்சியை அமைக்க உள்ளது.

தேர்தல் முடிவுகளுக்கு அமைய 400 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றில் வலதுசாரிக் கூட்டணி 237 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. அதில் இத்தாலியின் சகோதரர்கள் கட்சி தனித்து 114 இடங்களைப் பெற்றுள்ளது. 200 உறுப்பினர்களைக் கொண்ட மேலவையில் 112  ஆசனங்களை இந்தக் கூட்டணி பெற்றுள்ளது.

2012ஆம் ஆண்டில் கட்சியை ஆரம்பித்து 2018ஆம் ஆண்டுத் தேர்தலில் வெறும் 4 விழுக்காடு வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்த ஜோர்ஜியோ மெலனி தலைமையிலான இத்தாலியின் சகோதரர்கள் கட்சி இந்த வருடம் நடைபெற்ற தேர்தலில் 26 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது மாத்திரமன்றி ஆட்சியையே பிடித்திருப்பது ஆச்சரியமான விடயமாகப் பார்க்கப்பட்டாலும், அவரது வெற்றி எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். தேர்தலுக்கு முந்திய கருத்துக் கணிப்புகள் யாவும் அவரது வெற்றியை எதிர்வு கூறியிருந்தன.

ஜோர்ஜியோ மெலனி தலைமையிலான இத்தாலியின் சகோதரர்கள் கட்சி இரண்டாம் உலகப் போர் காலகட்ட பாசிசக் கட்சியான பெனிற்றோ முசோலினி தலைமையிலான இத்தாலிய சோசலிச இயக்கத்தின் நீட்சியாகக் கருதப்படுகின்றது. இத்தாலிய சோசலிச இயக்கத்தின் அனைத்துக் கொள்கைகளையும் 45 வயது நிரம்பிய மெலனி தலைமையிலான கட்சி கடைப்பிடிக்காது விட்டாலும் அதன் கூறுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதை மறுப்பதற்கில்லை.

1945இல் இத்தாலியில் மட்டுமன்றி முழு உலகத்தாலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட பாசிசக் கொள்கைகளைக் கொண்ட ஒரு கட்சியின் தலைமையில் 77 ஆண்டுகளின் பின்னர் ஒரு ஆட்சி அமையும் நிலை இத்தாலியில் எவ்வாறு உருவானது? பாரம்பரியம் மிக்க கட்சிகள் பலவும் இருக்கையில், மிகக் கிட்டிய கடந்தகாலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சி குறுகிய காலத்தில் முன்னணிக்கு வந்து ஆட்சியைப் பிடித்தது எவ்வாறு?

இரண்டாம் உலகப் போரின் பின்னான காலகட்டத்தில் மேற்கு ஐரோப்பாவில் கம்யூனிசக் கட்சி மிகவும் வலுவான நிலையில் இருந்த நாடு என்றால் அது இத்தாலிதான். தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கைக் கொண்டிருந்த இந்தக் கட்சி பலமான தொழிற் சங்கக் கட்டமைப்புகளையும் கொண்டிருந்தது. ஆனால், அந்தக் கட்சியின் தொடர்ச்சியான பொருத்தமற்ற செயற்பாடுகளாலும், புதிய பூகோளமயமான பொருளாதாரக் கொள்கை காரணமாகவும் கம்யூனிசக் கட்சினதும், ஏனைய இடதுசாரிக் கட்சிகளினதும் பிடி இத்தாலிய அரசியலில் தளரத் தொடங்கியது.

கடந்த பல வருடங்களாக இத்தாலியில் அரசியல் நிலைமை மிகுந்த தளம்பலுக்கு உரியதாகவே இருந்து வந்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் 11 அரசாங்கங்கள் மாறி மாறிப் பதவிக்கு வந்துள்ளன என்பதன் மூலம் இத்தாலியில் நிலவிய அரசியல் தளம்பலைப் புரிந்துகொள்ள முடியும். இவ்வாறான ஒரு பின்னணியில் ஒரு நிலையான ஆட்சியைத் தரக் கூடிய கட்சியாகப் பாரம்பரியக் கட்சிகள் எதனையும் இத்தாலிய மக்களால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்திராத சூழலிலேயே புதிய வரவான இத்தாலியின் சகோதரர்கள் கட்சிக்கு ஒரு வாய்ப்பை மக்கள் வழங்கியுள்ளார்கள் எனப் புரிந்து கொள்ள முடியும்.

எனினும், அமையப் போகும் புதிய அரசாங்கத்தினால் இத்தாலி தற்போது எதிர்கொண்டுள்ள சவால்கள், உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பா எதிர்கொண்டுள்ள சவால்கள், குறிப்பாக எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சனை, கொரோனப் பெருந் தொற்று காரணமாகச் சரிந்து போயுள்ள பொருளாதார நிலைமையச் சீர்செய்ய வேண்டிய நெருக்கடி என்பவற்றை புதிய அரசாங்கம் வெற்றிகரமாகக் கையாளுமா என்ற கேள்வி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் எழுப்பப்பட்டு உள்ளது.

‘கடவுள், குடும்பம், தாய்நாடு’ என்ற மகுட வாசகத்தோடு களமிறங்கிய ஜோர்ஜியோ மெலனி தலைமையிலான இத்தாலியின் சகோதரர்கள் கட்சி அகதிகள் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்கள் தொடர்பில் கடுமையான நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளமை ஒன்றும் இரகசியமான விடயங்களல்ல. மத்திய தரைக் கடலின் ஊடாக அபாயகரமான பயணங்களை மேற்கொண்டு ஐரோப்பாக் கண்டத்தில் பாதுகாப்பு தேடி ஆண்டுதோறும் வருகை தரும் ஆயிரக் கணக்கான அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்களை மனிதாபிமான அடிப்படையில் பாதுகாக்கும் கடப்பாட்டைக் கொண்டுள்ள இத்தாலி போன்ற நாடுகள் அண்மைக் காலமாகத் தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொண்டுள்ளன. புதிதாக அமையப் போகும் அரசாங்கம் இந்த விடயத்தில் மேலும் இறுக்கமான கொள்கையைக் கடைபிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ள அதேவேளை, ஏலவே உள்நாட்டில் வாழும் வெளிநாட்டவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்ற ஐயமும் தோன்றியுள்ளது.

அதேவேளை, தாய்நாட்டுக்கு அதிக முன்னுரிமை தரும் ஜோர்ஜியோ மெலனி, ஐரோப்பிய ஒற்றுமையை வலுப்படுத்தத் தவறலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. அவரது தேர்தல் வெற்றி தொடர்பில் மேற்குலக நாடுகளின் தலைவர்கள் விடுத்துள்ள அறிக்கைகள் இந்த அம்சத்தைப் புலப்படுத்தவதை அவதானிக்க முடிகின்றது. மறுபுறம், உலகளாவிய அடிப்படையில் வலதுசாரித் தலைவர்கள் பலரும் மெலனி தலைமையிலான வலது சாரிக் கூட்டணிக்குக் கிடைத்த வெற்றியை வெகுவாகப் பாராட்டும் அறிக்கைகளை விடுத்துள்ளனர்.

உக்ரைன் போர் தொடர்பில் ரஸ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள மேற்குலகம், ஏனைய நாடுகளையும் அத்தகைய நிலைப்பாட்டை நோக்கித் தூண்டி வருவதை நாமறிவோம். ஆனால், இது விடயத்தில் மெலனி தலைமையிலான அரசாங்கம் ரஸ்ய ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கக் கூடும் என்ற அச்சம் மேற்குலக நாடுகளுக்கு உள்ளது. அவரது கூட்டணியில் உள்ள மற்றியோ சல்வினி, சில்வியோ பெர்லுஸ்கோனி ஆகியோர் ரஸ்ய ஆதரவாளர்கள் என்றே கருதப்பட்டு வருகின்றனர். குறிப்பபாக சில்வியோ பெர்லுஸ்கோனி ரஸ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் தனிப்பட்ட நண்பராகவும் உள்ளார். இருவரும் இணைந்து விடுமுறையைக் கழிக்கும் அளவுக்கு அவர்களுக்குள் நெருக்கம் உள்ளது.

அதே சமயம், உள் நாட்டிலும் புதிய அரசாங்கத்துக்கு எதிரான சலசலப்புகள் எழத் தொடங்கியுள்ளன. குறிப்பாக பல்கலைக் கழக மாணவர் மட்டத்தில் புதிய அரசாங்கத்தின் தீவிர வலதுசாரிக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு உருவாகி உள்ளது. அது மட்டுமன்றி, இது நாள் வரை உள்ளுராட்சி அரசியலில் மாத்திரம் அனுபவம் பெற்றிருந்த ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அந்தக் கட்சிக்கு தேசிய மட்ட அரசியலையும், சர்வதேச அரசியலையும் கையாளும் வல்லமை இருக்குமா என்ற சந்தேகங்களும் எழுப்பப்பட்டு உள்ளன.

மொத்தத்தில் எதிர்காலம் என்பது புதிய ஆட்சியாளர்களுக்கு சவால் நிறைந்ததாகவே இருக்கப் போகின்றது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தமக்கு வாக்களித்த மக்களுக்கு அவர்கள் விசுவாசமாகச் செயற்படப் போகின்றார்களா அல்லது மக்களின் தேவைகள், அபிலாசைகள் எதுவாக இருந்தாலும் பூகோள அரசியல் நலன்களே முக்கியம் என்ற அடிப்படையில் – சாமானிய மக்களின் கோரிக்கைகளைப் புறந்தள்ளி – அமெரிக்க சார்பு நிலைப்பாட்டுடன் கூடிய போர்களை ஆதரிக்கும் கொள்கையைத் தொடரப் போகின்றார்களா என்பதை அறிந்துகொள்ள இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது என்பதே யதார்த்த நிலை.

Leave A Reply

Your email address will not be published.