நீதிமன்றத்தில் தீக்குளித்து உயிரிழந்த வேல்முருகன் பழங்குடியினர் அல்ல – தமிழக அரசு விளக்கம்

மகனுக்கு பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் அதை வழங்காமல் தங்களை அலைக்கழித்ததாக குற்றம் சாட்டி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையம் அருகே காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை சேர்ந்த வேல்முருகன் என்பவர் இரு நாட்களுக்கு முன்பு தீக்களித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இன்று இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், பட்டியலினத்தை சேர்ந்த வேல்முருகன் தனது மகனுக்கு பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி அளித்த விண்ணப்பத்தின் அடிப்படையில் செப்டம்பர் 23ஆம் தேதி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள ஆய்வில் வேல்முருகன் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல என்பதால் அவரது விண்ணப்பம் செப்டம்பர் 26ஆம் தேதி நிராகரிக்கப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. மேலும், தன்னுடைய சகோதரர் எனக் கூறி, பழங்குடியினர் இனத்தை சேர்ந்த இளவரசன் என்பவரின் சான்றை வேல்முருகன் தாக்கல் செய்திருக்கிறார் எனவும், இளவரசனுக்கும், வேல் முருகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து கள ஆய்வின்போது அண்டை வீட்டார்கள் இடமோ தெருவில் வசிப்பவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் எந்த தகவலும் இடம்பெறவில்லை எனக் கூறிய நீதிபதிகள், வேல்முருகன் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவரா என்பது குறித்து, மாவட்ட வருவாய் அதிகாரியை நியமித்து விசாரிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.

மாவட்ட வருவாய் அதிகாரி, அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர், அண்டை வீட்டார்கள், வேல்முருகனின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் விசாரணை நடத்த வேண்டும் எனவும், சகோதரர் எனக் கூறிய இளவரசனிடமும் விசாரணை நடத்தி இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.