கட்சி அரசியலைப் புறந்தள்ளி மக்களின் உணவுப் பிரச்சினைக்கு தீர்வு காண உறுதி கொள்வோம்!

“சம்பிரதாய கட்சி அரசியலைப் புறந்தள்ளி, உணவுப் பாதுகாப்பை உருவாக்குவதன் மூலம் மக்களின் உணவுப் பிரச்சினையைத் தீர்க்கும் வேலைத்திட்டத்தில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.”

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

கிராமிய பொருளாதார மையங்களை வலுவூட்டும் பல்துறை ஒருங்கிணைந்த பொறிமுறை தொடர்பில் அம்பாறை மாவட்டத்திற்கான அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று முற்பகல் அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதுவரை நாம் மிகவும் கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டிருந்தாலும் எவரும் பட்டினியால் வாட அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இந்தச் செயற்றிட்டத்தை வெற்றிகொள்வதன் மூலம் உலக உணவு நெருக்கடிக்கு முகங்கொடுக்கக்கூடியதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதேவேளை அடுத்த வருடம் முதல் விவசாயம் நவீனமயப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுப்படுத்துவதற்கான பலதரப்பு கூட்டுப் பொறிமுறையை அமுல்படுத்துவது, அம்பாறை மாவட்டத்தை அபிவிருத்தியடைந்த சமூகத்துடன் வளமான மாவட்டமாக மாற்றுவது என்பன மூலம் உணவுப் பாதுகாப்பையும் போஷாக்கையும் உறுதிப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

நாட்டின் நெல் உற்பத்தியில் 22 வீதம் அம்பாறை மாவட்ட விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படுவதுடன், எதிர்வரும் போகங்களில் வெற்றிகரமான அறுவடையை முன்னெடுப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட அரச அதிகாரிகளிடம் களப்பணியில் அவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் மற்றும் சிரமங்கள் தொடர்பில் ஜனாதிபதி நேரடியாகக் கேட்டறிந்தார்.

அம்பாறை மாவட்டத்தில் நிலவும் விவசாய மற்றும் கடற்றொழில் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அவற்றைச் செவிமடுத்த ஜனாதிபதி, அவை தொடர்பில் ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக விசேட குழுவொன்றை நியமிக்குமாறும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

இந்தக் கலந்துரையாடலின் பின்னர், ஹார்டி பண்ணை வளாகத்தை பார்வையிட்ட ஜனாதிபதி, பண்ணை வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது:-

“இரண்டாம் உலகப் போரின் போது உணவைப் பெற முடியாத நிலை இருந்தபோதிலும் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை. ஆனால், தற்போது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இப்போது பொருளாதாரத்தை கடந்த வருடத்தைவிடவும் ஓரளவு மீட்டுள்ளோம். இன்னும் பிரச்சினைகள் இருக்கின்றன. ஒருபக்கம் பணத்தை நாம் அச்சிட்டால் பணவீக்கம் அதிகரிக்கும். கையிருப்பில் உள்ள பணத்துடன் பணிகளை முன்னெடுத்தால் வரையறைகள் ஏற்படுகின்றன.

எவ்வாறாயினும், இந்தப் பிரச்சினையில் இருந்து மீண்டு, முன்நோக்கிச் செல்ல நாம் இங்கு ஒன்று கூடியுள்ளோம். எனவே இங்கு விவசாயத்தை மட்டும் நான் பார்க்கவில்லை. முழுமையான செயற்திட்டம் குறித்து பார்க்க வேண்டியுள்ளது. தற்போது உங்களின் பிரதேசங்களில் பயிர்ச் செய்கையை ஆரம்பியுங்கள்.

எமக்கு என்ன உணவு வகைகள் மேலதிகமாக தேவைப்படுகின்றன என்பது குறித்து எமது உணவுப் பாதுகாப்பு செயலணி மூலம் அறிவிக்கப்படும். நெல் பயிர்ச் செய்கை குறித்து பிரச்சினை இருக்காது.

இந்த நிலைமை தொடர்ந்தால் எமக்கு கையிருப்பு இருக்கும். எனினும், சோளம் குறித்து கவனம் செலுத்த வேண்டும். முடிந்த இடங்களில் அந்தப் பயிர்ச் செய்கையை அதிகரிக்க வேண்டும்.

எனவே, உங்களின் பிரதேசங்களிலும் இதனைச் செய்ய வேண்டும். கிராமப் புறத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் இந்த செயல் திட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளோம். அனைவரும் இதற்காக பணியாற்ற வேண்டும்.

முழு மாவட்டத்திலும் இதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும். அடுத்ததாக போஷாக்குக் குறைபாட்டில் உள்ளவர்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு உணவைப் பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டமொன்று வேண்டும்.

இதற்கான உணவு வங்கிகள், உணவுகளைப் பகிர்ந்தளிக்கும் சமூக சமையலறைகள் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். இந்தச் செயற்றிட்டங்களுக்கு அரசு முடிந்தளவு உதவிகளை வழங்கும்.

இந்தக் காலகட்டம் மிகவும் நெருக்கடியானது. எவரையும் பட்டினியில் இருக்க நாம் இடமளிக்கக்கூடாது. நாம் முன்நோக்கிப் பயணிக்க வேண்டும். ஆனால், பெரும்போகத்தின் விளைச்சல் கிடைத்த பின்னர் இந்த நிலைமையில் முன்னேற்றம் இருக்கும்.

எனினும், 2023ஆம் ஆண்டு இறுதிவரை நாம் இந்தச் செயற்றிட்டத்தை முன்னெடுக்க வேண்டும். எமது பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்தாலும் உலக உணவுப் பற்றாக்குறை இருக்கும் என்பதால் எமது நாட்டில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதன் பின்னரும் நாம் இந்தப் பொறிமுறையை நிறுத்தமாட்டோம்.

இதன் தொடர்ச்சியாக விவசாயத்தை நவீனமயப்படுத்த வேண்டும். எனவேதான் நாம் புதிய செயற்றிட்டமொன்றை முன்னேடுத்துள்ளோம். இந்தப் பணியில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். இந்தப் பணிகளின்போது எமக்கு கட்சி அரசியல் இருக்காது. கட்சி அரசியலை நாம் புறந்தள்ள வேண்டும்.

மக்களின் உணவுப் பிரச்சினையைத் தீர்க்கும் அரசியலுக்கு நாம் செல்ல வேண்டும். சம்பிரதாய அரசியலில் எந்தப் பயனும் இல்லை. தற்போதிருந்து அடுத்த ஏப்ரல் மாதம் வரை நாம் உற்பத்திகளை முன்னெடுக்க வேண்டும்.

விசேடமாக பெரும்போகத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும். இதற்கு ஒத்ததாக நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா வருகிறது. விசேடமாக சுதந்திரம் கிடைத்த பின்னர் டி.எஸ்.சேனாநாயக்கவினால் முதல்முறையாக ஆரம்பிக்கப்பட்ட கல்ஓயா நீர்ப்பாசன செயற்திட்டம் அம்பாறை மாவட்டத்திலேயே இருக்கிறது.

இந்தச் செயற்றிட்டத்துக்கு யாரிடமும் கடன் வாங்கவும் இல்லை, உதவி வாங்கவும் இல்லை. இங்கிலாந்துக்குக் கடன் வழங்கிவிட்டு, மீதமிருந்த பணத்தில் கல்ஓயா திட்டத்தை முன்னெடுத்தோம். இதனை முன்னுதாரணமாகக் கொண்டு அம்பாறை மாவட்டம், நாட்டுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்யும் என நம்புகிறேன்.

அரசியல் பேதங்கள் இன்றி அனைவரும் இணைந்து இந்தச் செயற்றிட்டத்தை முன்னெடுக்க வேண்டும். விவசாய அமைச்சரும், பிரதமரும் இந்தப் பிரதேசத்துக்கு வந்து, இந்தச் செயற்றிட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்து பார்ப்பார்கள். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பணியை முன்னெடுப்பீர்கள் என்று நான் நம்புகின்றேன்.

நாம் தற்போது எதிர்கொண்டிருக்கும் இந்த சவால்களை இதற்கு முன்னர் நாம் எப்போதுமே எதிர்கொண்டதில்லை. எமது பெற்றோர், மூதாதையர் கூட இவ்வாறான சவால்களை எதிர்கொள்ளவில்லை. இது எமக்கு புதிய சவால். நாம் சரியாக செயல்பட்டால், இதில் வெற்றியடைந்து இன்னும் பலம் பெறுவோம். எனவே, அடுத்த வருடத்தில், இந்த அடிப்படை பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள நாம் பணியாற்றுவோம் என்றும், இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்” – என்றார்.

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி. வீரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாவுல்லா, எச்.எம்.எம். ஹாரிஸ், பைசல் காசிம், டொக்டர். திலக் ராஜபக்ச, என்.எம்.எம். முஷாரப், டி. கலை அரசன், சரத் வீரசேகர, ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் முன்னாள் அமைச்சர் தயா கமகே, முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனோமா கமகே, தேசிய உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட மற்றும் கிழக்கு மாகாண பிரதம செயலாளர், அம்பாறை மாவட்டச் செயலாளர், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண சபை தலைவர் மற்றும் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயம், நீர்ப்பாசனம், சமுர்த்தி ஆகியவற்றுடன் தொடர்புடைய அரச அதிகாரிகள் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.