மக்கள் நரகலோகத்தில்; ஆட்சியாளர்கள் சொர்க்கலோகத்தில்! முன்னாள் எம்.பி. ஆதங்கம்

“நாடும் மக்களும் வங்குரோத்து அடைந்தாலும் ஆட்சியாளர்கள் செழிப்பாகவே வாழ்கின்றார்கள். மக்கள் நரகலோகத்திலும் ஆட்சியாளர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் சொர்க்கலோகத்திலும் வாழும் நிலை போன்று தெரிகின்றது.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“ஒவ்வொரு நாட்டினதும் அபிவிருத்திக்கு அத்திவாரமாக இருப்பவை தேசிய ஐக்கியம், மனித உரிமை, பொருளாதாரம், அந்த நாடு பற்றிய நன்மதிப்பு போன்றவையாகும். ஆனால், துரதிஷ்டவசமாக இந்த நேரிடையான நியமங்கள் இலங்கையில் எதிர்மறையாக்கப்பட்டுள்ளன.

இதற்கான காரணம் சிங்கள பெளத்த அடிப்படைவாதமாகும். இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து சிங்கள ஆட்சியாளர்களால் அடிப்படைவாதங்கள் அரசியல் யாப்பு சட்ட,திட்ட ரீதியாகப் பின்பற்றப்படுகின்றன.

இதனால் 74 ஆண்டுகளில் தேசிய அபிவிருத்தியின் அடிப்படையாக விளங்கும் பல்லின மக்களிடையிலான தேசிய ஐக்கியமானது, பிரித்தாளும் அபதந்திரம் மூலமாக ஆழமாகச் சிதைக்கப்பட்டுள்ளது. இதனால் இனங்கள் இடையே முரண்பாடுகள் தோன்றியது.

அந்த முரண்பாட்டுக்குத்தீர்வு காணாததால், முரண்பாடு மோதலாகி அழிவை ஏற்படுத்திய 30 வருட கால யுத்தமாக மாறியது. யுத்தத்தை எப்படியாவது வெல்லவேண்டும் என்ற நோக்கில் அரசு செயற்பட்டதால் இனவழிப்புகள், இனவன்மங்கள், பொருளாதார இழப்புகள் இடம்பெற்றன.

இதன் காரணமாக தமிழர்கள் அழிக்கப்பட்டனர் துரத்தப்பட்டனர். இதனால் பாரியளவில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன.

அந்த விடயம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வரை சென்று விட்டது.

வலிந்து காணாமல் தொலைக்கப்பட்ட தமிழுறவுகள் தொடர்பாக 13 ஆண்டுகளாக அவர்களின் உறவுகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இன, மதவாத அடிப்படையில் தமிழர்களை ஒடுக்கவும், அழிக்கவும் அரசு நினைத்ததால் யுத்தத்துக்காகப் பொருளாதாரம் பலியாக்கப்பட்டுள்ளது.

மேலும், யுத்தத்தை அரசியல் வியாபாரம் ஆக்கியதால் பாரிய ஊழல், மோசடிகள், திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளன. நமது நாடு பற்றிய மரியாதை கெளரவம் அற்றுப் போயுள்ளது.

1983 கறுப்பு யூலை இனவழிப்பின் பின்னர் அநுர பண்டாரநாயக்க வெளிநாடு சென்ற போது நடைபெற்ற சம்பவம் ஒன்றை ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். வெளிநாட்டு நண்பர் ஒருவர் தனது கையை விரித்துப் பார்ததாராம், இவர் என்ன பார்ககிறீர்கள் என்று கேட்டாராம், அதற்கு அவர் சொன்ன பதில், உங்கள் கைகளிலும் இரத்தக்கறைகள் இருக்கின்றதா? என்பதைத்தான் அவதானித்ததாகக் குறிப்பிட்டிருந்தாராம் என்பது நினைவூட்டத்தக்கது.

அந்தச் சம்பவம் தனக்கு வேதனை அளித்ததாக அன்று குறிப்பிட்டிருந்தார். அநுர பண்டாரநாயக்க உயிரோடு இருந்திருந்தால் 2009இல் முள்ளிவாய்க்காலில் தனது கட்சிக்காரரால் நடத்தி முடிந்த இறுதி அழிப்பு யுத்தம் பற்றி என்ன கூறியிருப்பாரோ தெரியவில்லை.

அவை ஒரு புறமிருக்க, இந்த நிலையில் கடன் பொறியில் வீழ்ந்துள்ள, நமது நாட்டுக்குக் கடன் வழங்க உலக நாடுகள் பின்னிற்கின்றன. பணவீக்கம், பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தும் இனவாத, மதவாத ஆட்சியாளர்கள் அரசியல் இலாபத்துக்காக அடிப்படைவாதத்தையே தமது முதலீடாகப் பயன்படுத்தி அரசியல் வியாபாரம் செய்து வருகின்றனர்.

நாடும் மக்களும் வங்குரோத்து அடைந்தாலும் ஆட்சியாளர்கள் செழிப்பாகவே வாழ்கின்றார்கள். மக்கள் நரகலோகத்திலும் ஆட்சியாளர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் சொர்க்கலோகத்திலும் வாழும் நிலை போன்று தெரிகின்றது.

தமிழ், முஸ்லிம் மக்களைப் பாரபட்சமாக நடத்திய சிங்கள ஆட்சியாளர்கள் கடைசியாக சிங்கள மக்களையும் ஏமாற்றமடையச் செய்துள்ளார்கள். இதனால் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களையே குறிப்பாகச் சிங்கள மக்கள் வீடுகளுக்கு அனுப்பிவிட்டனர். இப்படியான பாரிய தீங்குகள் ஏற்பட்ட போதும் இந்த நாட்டில் இனவாதம், மதவாதம் ஓயவில்லை.

மொத்தத்தில் எமது நாட்டில் பேரின அடிப்படைவாதமானது நாட்டில் தேசிய ஐக்கியம், மனித உரிமைகள், பொருளாதாரம், பண்பாடு, கெளரவம் என்று அனைத்தையும் பலியெடுத்து விட்டது.

இப்போது பாரிய கடன் பொறியில் நாடு விழுந்துள்ளது.கண்கெட்ட பின்னரும் கூட ஆட்சியாளர்கள் சூரிய வணக்கம் செய்யத் தயாராக இல்லை. அதாவது தாம் இழைத்த தவறுகளை திருத்திக்கொள்ளவே இல்லை. அவர்கள் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு முன்வரவில்லை.

அடிப்படைவாத அரசியல் நாட்டை அரசியல், பொருளாதார, சமூக, கலாசார ரீதியாக ஆக்கத்தைத் தரவில்லை; அழிவையே தந்துள்ளது. இதனை உணராதவரை நாட்டுக்கு விமோசனம் கிடையாது.

ஆட்சியாளர்கள் திருந்த இடமில்லை. அவர்களுக்கு வாக்களிக்கும் மக்களாவது திருந்தமாட்டார்களா? என்பதுதான் முற்போக்குவாதிகளின் அறிவியல் நிலைப்படாகும்.

அழகிய நாட்டின் சரித்திரத்தை தரித்திரமாக்கிய நரித்திறன்வாதிகள் உரித்தெடுத்த பிற்போக்குவாத அடிப்படைவாதிகளாகவே இதுவரை இருந்துள்ளனர்.

இந்த மனப்பாங்குதான் நாட்டை அதல விதல பாதாழத்தில் தள்ளியுள்ளது.

தேசிய இனப்பிரச்சினை என்ற முடிச்சு நியாயமாக அவிழ்க்கப்பட்டால், ஏனைய முடிச்சுகள் யாவும் இலகுவாக அவிழ்ந்துவிடும் என்பதே உண்மை.

இதை உணர்ந்தால் நாட்டுக்கு நன்மை கிடைக்கும். மக்களின் பிரச்சினைகளும் தீர வாய்பபுள்ளது” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.