இந்தியா, ஐநா உட்பட உலகத்துடன் சேர்ந்து, பெருந்தோட்டங்களில் பட்டினி சாவு நடக்க முன் நடவடிக்கை எடுங்கள் பாராளுமன்றத்தில் பிரேரணை.

இன்றைய பொருளாதார நெருக்கடி எமது நாட்டின் தோட்ட தொழிலாளர்களை ஒப்பீட்டளவில் வேறு எந்த பிரிவினரையும் விட மிக அதிகமாக பாதிக்கின்றது. உணவு நெருக்கடி, பெருந்தோட்ட துறையில் அதிகபட்ச 51 விகிதமும், நாட்டின் நகர துறையில் 43 விகிதமும், கிராமிய துறையில் 34 விகிதமும் பதிவாகி உள்ளன.

இதை ஐநா சபை உட்பட உலக நிறுவனங்களின் அறிக்கைகளே கூறுகின்றன. எனினும் இதை அரசாங்கம் கணக்கில் எடுப்பதாக தெரியவில்லை. ஆகவே இந்தியா, ஐநா உட்பட உலக சமூகத்துடன் சேர்ந்து, பெருந்தோட்டங்களில் பட்டினி சாவு நடக்க முன் நடவடிக்கை எடுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் பாராளுமன்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்பித்து உரையாற்றும் போது கூறினார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தனது உரையில், பிரேரணையை முதலில் ஆங்கில மொழியிலும், அது பற்றிய விளக்கத்தை பின்னர் சிங்கள மொழியிலும் நிகழ்த்தினார். மனோ எம்பி மேலும் கூறியதாவது;

பெருந்தோட்ட துறையில் நிலவும் பாரதூரமான நிலைமைகளை பின்வரும் உலக நிறுவன அறிக்கைகள் காட்டுகின்றன.

(1) ஐநா சபையின் உணவு விவசாய நிறுவனம்/உலக உணவு நிறுவனத்தின் (UN FAO/WFP) இலங்கை உணவு நெருக்கடி கணிப்பீடு பற்றிய விசேட கூட்டறிக்கை

(2) ஐநா சபையின் உலக உணவு நிறுவனத்தின் (UN WFP இலங்கை உணவு நெருக்கடி பற்றிய) கண்காணிப்பு அறிக்கை

(3)இலங்கை செஞ்சிலுவை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கங்களின் (SLRC/ICRC) பொருளாதார ஆய்வறிக்கை

(4)நவீன அடிமைத்துவம் பற்றிய ஐநா விசேட அறிக்கையாளர் டொமாயா ஒபகடாவின் ஐநா மனித உரிமை ஆணையக அறிக்கை

நாட்டின் உணவு நெருக்கடி பற்றிய குடும்ப மட்ட ஆய்வுகளில், பெருந்தோட்ட துறையில் அதிகபட்ச 51 விகிதம் பதிவாகி உள்ளது. நாட்டின் நகர துறையில் 43 விகிதமும், கிராமிய துறையில் 34 விகிதமும் பதிவாகி உள்ளன. இலங்கையில் இன்று ஒப்பீட்டளவில் மிகவும் நலிவுற்ற பிரிவினர் 51 விகிதமான பெருந்தோட்ட மக்கள் என்பதை கவனியுங்கள். இது எமக்கு தெரியும். கைப்புண்ணை காண கண்ணாடி தேவையில்லை. ஆனால், இதைதான் இன்று உலக சமுதாயமே கூறுவதை கவனியுங்கள். அங்கே துர்ப்பாக்கிய பட்டினி சாவு நடக்க முன் இதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறோம் என்பதையும் கவனியுங்கள்.

ஐநா விசேட அறிக்கையாளர் டோமொயா ஒபொகடா பெருந்தோட்ட மக்கள் ஒடுக்கப்படுவதில், பெருந்தோட்ட மக்கள் சிறுபான்மை தமிழர்கள் என்ற காரணமும் இருக்கிறது என்று கூறியுள்ளார். இது பாரதூரமான, ஆனால், உண்மை குற்றச்சாட்டு. இங்கே இனவாதம் நிலவுகிறது. அதை அவர் ஐநா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு கூறியுள்ளார்.

நான் ஏற்கனவே இதுபற்றிய கலந்துரையாடலை ஆரம்பிக்கும்படி கொழும்பில் உள்ள ஐநா மனித உரிமை ஆலோசகர் ஜுஹான் பெர்னாண்டசுக்கு எழுதி கூறியுள்ளேன். விசேட ஐநா அறிக்கையாளர் டோமொயா இது பற்றிய எனது டுவீட்டர் செய்திக்கு பதிலளித்துள்ளார். அடுத்த வருடம் மலையக தமிழர் பிரச்சினையையும் ஐநா மனித உரிமை ஆணையகத்தில் எதிர்கொள்ள தயாராகுங்கள்.

நடப்பு அரசாங்க சமூக பாதுகாப்பு முறைமைகள், பெருந்தோட்ட துறையை தேவையான அளவில் பாதுகாக்காமல், இந்த பிரிவை முழுமையாக தோட்ட தனியார் நிறுவனங்களின் கைகளில் விட்டுள்ளன. இந்த நடைமுறை இதற்கு முன்னும் சாத்தியப்படவில்லை. இனிமேலும் சாத்தியப்படாது.

இந்த பெருந்தோட்ட கம்பனி முதலாளிகள் நிலத்துக்கு சொந்தக்காரர்கள் இல்லை. இது அரசு நிலம். மக்கள் நிலம். இந்த நிலத்தின் மீது நமது தொழிலாளர் நிகழ்த்துகின்ற உழைப்பிலிருந்து பெருகின்ற இலாபத்தை இவர்கள், உழைக்கும் மக்களுடன் பகிர்ந்து கொள்ள தயார் இல்லை. இதை இவர்கள் இனி தொடர்ந்து செய்ய இடம் கொடோம். வெகு விரைவில் நாம் அனைத்து தோட்டதொழிற்சங்களையும் இணைத்து கூட்டு வேலைத்திட்டத்தில் இறங்க உள்ளோம்.

“சப்ளை செயின்” என்றால், ஒரு பொருள் உற்பத்தி செய்யப்படும் முதல் புள்ளியில் இருந்து அது விற்பனை கடைசி புள்ளி வரை என்பதாகும். முதல் புள்ளியில் மனித உரிமைகள் கேவலமாக மீறப்படுகிறது என இன்று உலகமே உணர தொடங்குகிறது. ஆகவே கடைசி புள்ளியில், லண்டன், பாரிஸ், நிவ்யோர்க் நகரங்களில், “சிலோன் டீ”யை விலைக்கு வாங்கி குடிப்பதை நிறுத்த எம்மால் முடியும். தேயில ஏற்றுமதியை நிறுத்த எம்மால் முடியும். நாட்டை நேசிபவர்கள் என்பதால் அதை நாம் செய்ய விரும்பவில்லை. அந்த நிலைக்கு எம்மை தள்ள விட வேண்டாம்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்த பதவியில் இருக்கும் போது, எனக்கு இந்த சபையில் ஒரு உறுதி மொழி வழங்கினார். தோட்டங்களில் இருக்கும் பயன்படுத்தப் படாத நிலங்களை அங்கு வாழும் மக்களுக்கு வீட்டு தோட்டங்களை செய்ய வழங்குவதாக கூறினார். அந்த திட்டத்துக்கு, “மனோ கணேசன் திட்டம்” என எனது பெயரை வைப்பதாகவும் கூறினார். ஒன்றும் நடக்க வில்லை. எனது பெயர் வேண்டாம். துன்பப்படும் மக்களுக்கு காணி வழங்க அனைத்து தரப்புகளையும் அழைத்து கூட்டம் நடத்துங்கள். போதும்.

சமுர்த்தி திணைக்களம், 17/10/2022 திகதிய, DSD/HO/14/SS/05/01/04/2022 இலக்க சுற்றறிக்கை மூலம் செப்டம்பர், அக்டோபர், நவம்பர், காலகட்டத்துக்கான உதவி பெறுனர் விண்ணப்பங்களை கோரியுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் அமுலாகும் இந்த திட்டம் பற்றிய சிங்கள மொழி சுற்றறிக்கை விபரங்கள், இலங்கையின் மிகவும் நலிவுற்ற பிரிவினரான பெருந்தோட்ட மக்களை சென்றடையவில்லை.

இந்த சமுர்த்தி திணைக்களம், பெருந்தோட்ட மக்களை பொருட்படுத்துவதே இல்லை. பிழையான கணக்குகளை வைத்துகொண்டு, இலங்கையில் மிகவும் நலிவுற்ற பிரிவினர் என உலகமே சொல்லும் பெருந்தோட்ட மக்களுக்கு சமுர்தி உதவிகள் வழங்குவதில்லை. வாழ்வாதார உதவிகள் வழங்குவதில்லை. சமுர்த்தி பட்டியலில் பெருந்தோட்ட மக்கள் இல்லையென்று, சமுர்த்தி திட்டத்துக்கு நிதி உதவி செய்யும், ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு நான் சொல்ல போகிறேன்.

இலங்கை பாராளுமன்றம், இலங்கையின் மிகவும் நலிவுற்ற பிரிவினரான இந்த பெருந்தோட்ட மக்களின் மீது விசேட அவதானத்தை செலுத்த வேண்டும் என நான் பிரேரிக்கிறேன்

இலங்கை அரசாங்கம், உடனடியாக இலங்கையில் உணவு நெருக்கடி அபாய நிலையில் இருக்கும் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில், ஐநா மற்றும் இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நட்பு நாட்டு அரசாங்கங்களின் ஒத்துழைப்புடன், விசேட ஒதுக்கீட்டு (Affirmative Action) நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் எனவும் நான் பிரேரிக்கிறேன்.

Leave A Reply

Your email address will not be published.