ஜே.ஆரின் இனவெறிதான் நாட்டின் அதிபயங்கர நிலைக்கு அடிகோலியது!

“இரண்டு மொழி எனில் ஒரு நாடு; ஒரு மொழி எனில் இரண்டு நாடு என்ற கொல்வின் ஆர்.டி.சில்வாவின் தீர்க்கதரிசனத்தைப் புறந்தள்ளி, போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்ற ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் இனவெறிதான், இன்று இந்த நாட்டின் அதிபயங்கர நிலைக்கு அடிகோலியது.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

நடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தின் போது, நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“1978ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பும், அவரது இனவாத நிலைப்பாடுமே இந்த நாட்டில் ஒருபெரும் இரத்தக்களரியை ஏற்படுத்தியிருந்தது. அந்த யாப்புருவாக்கத்தில் தந்தை செல்வாவின் மருமகனான ஜே.வில்சன் முக்கிய பங்காற்றியிருந்தார் என்று திருத்தச்சட்டத்தைச் சமர்ப்பித்து உரையாற்றிய அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார். அதை நான் மறுக்கவில்லை. ஆனால், அந்த யாப்புருவாக்கத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுடன் இணைந்து செயற்பட்டதையிட்டு தான் மானசீகமாக மனம் வருந்துவதாக ஏ.ஜே.வில்சன் ஒரு நூலையே எழுதி வெளியிட்டுள்ளார் என்பதை அமைச்சர் கவனத்தில்கொள்ள வேண்டும்.

வெறுமனே யாப்புத் திருத்தங்களை கொண்டுவருவதாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதாலும் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்பதை அதிகாரபீடத்துக்கு வரும் தலைவர்கள் உணர மறுப்பதுதான் இந்த நாட்டின் சாபக்கேடு.

இந்த நாடு அரசியல் ஸ்திரத்தன்மையற்றிருப்பதற்கும், பொருளாதார ரீதியாக அதலபாதாளத்திலிருப்பதற்கும் இந்த நாட்டில் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினையும், அதன்வழி நிகழ்ந்தேறிய பெரும் போரும்தான் முதன்மைக்காரணம்.

ஆனால் அந்தப் போர் முடிவுற்று 12 ஆண்டுகளைக் கடந்தும் போருக்கான காரணம் குறித்தோ, தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்தோ எந்தச் சிங்களத் தலைவர்களும் செவிசாய்க்கவில்லை.

போரை வென்ற, சர்வ வல்லமை பொருந்திய அரசராக சிங்கள மக்களால் கொண்டாடப்பட்ட மஹிந்த ராஜபக்ச நினைத்திருந்தால், தனக்கிருந்த பெரும்பான்மையை வைத்து இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்கியிருக்கலாம், அந்தச் சிந்தனையற்றிருந்த அவரது இனவெறிதான் அவரை இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கின்றது.

இனிமேலாவது சிங்களத் தலைவர்கள் மக்கள் மனங்களை வெல்லும் வகையில் செயற்பட வேண்டும். 200 வருட விவசாய அனுபவமும், ஆற்றலும் கொண்ட மலையக மக்களுக்கு குடியிருப்பதற்கே முடியாதளவுக்கு 7 பேர்ச் காணி மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றது. விவசாயத்துக்கான நிலங்களையும், காலம்காலமாக அவர்கள் கோரும் சம்பள உயர்வையும் அவர்களுக்கு வழங்க முன்வாருங்கள். அதன்மூலம் அவர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டமைப்பார்கள்.

மக்கள் மனங்களை வென்ற புதிய யாப்பை உருவாக்காத வரை திருத்தங்கள் ஒருபோதும் இந்த நாட்டைத் திருத்தாது. குருந்தூர்மலை, வெடுக்குநாறிமலை, நாவற்குழி, மயிலிட்டி என்று சிங்களவர்களின் காலடித்தடங்களே படாத இடங்களில் எல்லாம் எதற்காக விகாரை அமைக்கின்றீர்கள்?” – என்று கேள்வி எழுப்பினார்.

“லலித் அத்துலத் முதலி போன்றவர்களின் இனவெறி இந்த நாட்டையே சீரழித்தது, காமினி திஸாநாயக்கா போன்றோரின் இனத்துவேசம்தான் யாழ்ப்பாணம் நூலக எரிப்புக்குக் காரணமானது” என்ற சிறீதரன் எம்.பியின் கருத்திலே குறுக்கிட்ட காமினி திஸாநாயக்கவின் மகன் மயந்த திஸாநாயக்கா, தனது தந்தை யாழ். நூலகத்தை எரிக்கவில்லை என்று தெரிவித்ததை உடனடியாகவே மறுத்த சிறீதரன், உங்கள் தந்தையே யாழ். நூலக எரிப்பின் பிரதான சூத்திரதாரி என மீள வலுயுறுத்தியதோடு, தலைமை தாங்கும் உறுப்பினராக உள்ள நீங்கள், அக்கிராசனத்தைப் பயன்படுத்தி இந்த நாட்டில் மீள இனவாதத்தை விதைக்காதீர்கள் என அவரை நேரடியாகச் சாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.