தமிழர் செறிந்து வாழும் வடக்கில் மற்றொரு பேராபத்து!

உலகில் மிக ஆபத்தானதும் அதிகூடிய விலை உள்ளதுமான உயிர்கொல்லி கொக்கேய்ன் போதைப்பொருள் இந்தியாவிலிருந்து மன்னார் மாவட்டத்தின் சிலாபத்துறை ஊடாக கடத்திவரப்பட்டுள்ளது. அவ்வாறு கொண்டு வரப்பட்ட உயிர்கொல்லி கொக்கேய்னில் ஒரு கிலோ 532 கிராம் – சுமார் 5 கோடி ரூபா பெறுமதியானவை மன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பிரகாரம் புத்தளம் நுரைச்சோலை பகுதிக்குத் தேடுதல் நடவடிக்கைக்காக சென்றிருந்த மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் 1 கிலோ 26 கிராம் உயிர்கொல்லி கொக்கேய்ன் போதைப் பொருளை மீட்டனர். அதனை உடைமையில் வைத்திருந்த சந்தேகத்தில் 5 பேரைக் (4 சிங்களவர்கள், 1 முஸ்லிம்) கைது செய்தனர். அவர்கள் 25, 26, 34, 36 மற்றும் 53 வயதுடையவர்கள்.

இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலர் பிரிவில் 48 வயதுடைய ஒருவர் (முஸ்லிம்) கைது செய்யப்பட்டார். அவரது வீட்டிலிருந்தும் 506 கிராம் உயிர்கொல்லி கொக்கேய்ன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தியாவிலிருந்து மன்னாரின் சிலாபத்துறைக்கு கொண்டு வரப்பட்ட உயிர்கொல்லி கொக்கேய்னே அங்கிருந்து வேறு இடங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மன்னார் மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் துல்சான் நாகாவத்தவின் பணிப்பில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகே, மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரத்னாயக தலைமையிலான பொலிஸ் குழுவினர் இதனைக் கைப்பற்றியுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருள்களான கஞ்சா, ஹெரோய்ன், ஐஸ் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அவற்றைவிட மிக ஆபத்தான கொக்கேய்ன் இங்கு மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.