ஆட்சியில் எவர் இருந்தாலும் எம்மை இனிமேல் ஏமாற்றவே முடியாது! – சம்பந்தன் அதிரடி.

“தமிழர்களின் வாழ்வில் அமைதி ஏற்பட்டு மக்கள் முன்னேற்றகரமாக வாழக்கூடிய வகையில் இலங்கையில் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட வேண்டுமென இன்றைய நாளில் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். அந்தப் புதிய அரசமைப்பின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் எனவும் இறைவனை வேண்டுகின்றோம்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இன்றைய தீபாவளிப் பெருநாளை முன்னிட்டு அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“அனைவருக்கும் எனது அன்பான இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி தமிழ் மக்களுக்கு முக்கிய பண்டிகை நாள்.

புதிய அரசமைப்பு ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும்.

இந்த விடயம் சம்பந்தமாக நாங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றோம். வழமை போல் இலங்கை அரசு, இந்தக் கருமத்தைச் செய்யாமல் இழுத்தடிக்க முடியாது.

கடந்த காலக் கசப்பான சம்பவங்களால் நாங்கள் விரக்தி நிலையில் இருக்கின்றோம். எனவே, தீர்வு விடயத்தில் இலங்கை அரசு அசண்டையீனமாகச் செயற்பட்டால் தமிழ் மக்களின் நலன் கருதி நாங்கள் தீர்க்கமான முடிவை எடுப்போம்.

சர்வதேச சமூகத்தை இந்தக் கருமத்தில் நேரடியாகப் பங்கெடுக்கச் செய்து தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்கு வழிவகுக்குமாறு நாங்கள் கோருவோம்.

இலங்கையின் ஆட்சியில் எவர் இருந்தாலும் எம்மை இனிமேல் ஏமாற்றவே முடியாது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.