இருவரை விரட்ட சுயாதீன ஆணைக்குழுக்களை இல்லாமல் செய்ய முயற்சியென குற்றச்சாட்டு

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் மூலம் நிறுவப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் சிங்களரல்லாத இரண்டு பிரதிநிதிகளை வெளியேற்றும் நோக்கத்துடன் அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களையும் இல்லாது செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 47 உறுப்பினர்களைக் கொண்ட பத்து சுயாதீன ஆணைக்குழுக்களிலும் இரண்டு உறுப்பினர்களை மாத்திரமே அரசாங்கம் குறிவைப்பதாக தேசிய தொழிற்சங்க முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கருத்து வெளியிட்ட அதன் இணை ஏற்பாட்டாளர் ஜோசப் ஸ்டாலின், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவியதால் அரச ஊழியர்களுக்க சுயாதீனமாக பணியாற்றக்கூடியதாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தொடர்ந்து இரண்டு அதிகாரிகள் தொடர்பில் கேள்வி எழுப்பி வருவதாகவும், அவர்கள் தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அவர்களை நீக்குவதற்கான அதிகாரம் அரசாங்கத்திற்கு காணப்படுவதாகவும் தொழிற்சங்கத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். “அரசாங்கம் எப்போதுமே இந்த நபர்கள் என இரண்டு நபர்களைப் பற்றியே பேசுகிறது. இந்த இரண்டு நபர்கள் யார்? அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அரசியலமைப்பு சபையின் ஜாவிட் யூசுப் பற்றி கருத்து வெளியிடுவதை நாம் கண்டோம், அவர் ஒரு குடிமகனா என கேட்கின்றார். விரும்பினால் அவரை அகற்றலா். பின்னர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் பற்றி விமர்சிக்கின்றார்” சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் சுயாதீனமானவர்கள் எனவும், அவர்கள் விரும்பியபடி செயற்பட முடியும் எனவும் சுட்டிக்காட்டிய ஜோசப் ஸ்டார்லின், குறித்த இரண்டு பிரதிநிதிகளுக்காக அனைத்து ஆணைக்குழுக்களையும் ஒழிக்க வேண்டுமா எனவும் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனநாயக நியமனங்கள் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் தலையீட்டுன் நியமிக்கப்படும் அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள், பத்து சுதந்திர ஆணைக்குழுக்களுக்கு பிரதிநிதிகளை நியமிப்பதாக ஜோசப் ஸ்டார்லின் தெரிவிக்கின்றார். அத்தகைய ஒரு ஜனநாயக கட்டமைப்பில் பத்து சுயாதீன ஆணைக்குழுக்கள் செயற்படுவதால் ஏற்படும் பிரச்சினை என்னவென, ஜோசப் ஸ்டார்லின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற தேசிய தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ், நாட்டின் அரசியலமைப்பு மாற்றப்பட்டு திருத்தப்பட வேண்டும் என்பது தனது கருத்து எனக் கூறியுள்ளார். எவ்வாறாயினும், “திருத்தம்” என்பதற்குப் பதிலாக ”இல்லாமல் செய்தல் அல்லது “ஒழித்தல்” என்ற சொற்றொடரை அடிக்கடி கேட்கக்கூடியதாக இருப்பதாகவும், இந்த சொல் “விதிமுறைக்கு அப்பாற்பட்டது” எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.