வடக்கில் போதைப்பொருள் வேரூன்றக் காரணம் என்ன? விக்கி வெளியிடும் பலத்த சந்தேகம்.

“தமிழரின் உரிமைப் போராட்டம் குறித்த சிந்தனையை இளைஞர்களிடத்தில் மழுங்கடிக்கும் நோக்குடன் போதைப்பொருள் விற்பனையையும், பாவனையையும் வடக்கு மாகாணத்தில் வேரூன்றச் செய்கின்றார்களா என்ற சந்தேகம் என்னிடம் இருக்கின்றது.”

இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் விற்பனையோ – போதைப்பொருள் பாவனையோ இருக்கவில்லை.

அவர்களின் காலத்தில் வடக்கில் போதைப்பொருள் சம்பந்தமான எந்தவிதமான பிரச்சினையும் இருக்கவில்லை.

அவர்களுக்குப் பின்னர் வடக்கு மாகாணத்துக்கு இராணுவத்தினர், கடற்படையினர், விமானப் படையினர் மற்றும் பொலிஸார் பெருமளவு வந்ததன் பிற்பாடு இங்கு எந்தவிதத்தில் இவ்வளவு போதைப்பொருள் விற்பனையும் பாவனையும் கூடியது என்பது தொடர்பில் நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்த விடயத்தில் பொலிஸார் கூடுமான அளவு அக்கறை காட்டி விசாரணைகளை மேற்கொள்கின்றார்களா? அல்லது அவர்களுடன் சேர்ந்து ஏதாவது நடவடிக்கைகள் நடைபெறுகின்றனவா? என்ற பலவிதமான சந்தேகங்கள் எங்களிடத்தில் எழுகின்றன.

ஆகவே, வடக்கு – கிழக்கு மாகாணங்களை எங்களிடத்தில் ஒப்படைத்து நிர்வாகம் செய்வதற்கு – அதிகாரம் செலுத்துவதற்கு இடமளித்தால் இவற்றையெல்லாம் நாங்கள் தடுத்து நிறுத்த முடியும்.

வெளியில் இருந்து வருபவர்கள் இங்கு இருக்கும் வரையில் இவ்வாறான நடவடிக்கைகள் கூடிக்கொண்டே போகும்.

இங்கு இருக்கின்ற இளைஞர்களுக்கு இந்தப் போதைப்பொருள் பாவனையை ஊட்டி – அவர்களுக்கு அதன் ருஷியைக் கொடுத்து அவர்கள் தங்களுடைய சுதந்திரம் சம்பந்தமாக – உரிமைகள் சம்பந்தமாக – உரித்துகள் சம்பந்தமாக நடவடிக்கைகளை எடுக்காது அவர்களைத் தூங்க வைக்கும் நிலைக்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்குடன் இவ்வாறான போதைப்பொருள் விற்பனை இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் எனக்கு இருக்கின்றது.

அதாவது தமிழரின் உரிமைப் போராட்டம் குறித்த சிந்தனையை இளைஞர்களிடத்தில் மழுங்கடிக்கும் நோக்குடன் போதைப்பொருள் விற்பனையையும், பாவனையையும் வடக்கு மாகாணத்தில் வேரூன்றச் செய்கின்றார்களா என்ற சந்தேகம் என்னிடம் இருக்கின்றது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.