படுகொலைகளுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழ் மக்கள் தொடர்ந்து போராடுவார்கள்! – நீதி அமைச்சரின் கருத்துக்கு தவராசா பதிலடி.

“தமிழர்களுக்கு இப்போதுள்ள பிரச்சினை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் திரும்பி வரமாட்டார்கள்; எனவே இழப்பீட்டைப் பெற்றுக்கொண்டு அமைதியாக இருத்தல் பற்றியதல்ல. அது நீதி பற்றியதும் பொறுப்புக் கூறல் பற்றியதுமாகும். எம்மால் கையளிக்கப்பட்ட நபர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் கொல்லப்பட்டார்களா? அப்படியென்றால் யாரால் கொல்லப்பட்டார்கள்? யாருடைய உத்தரவின் பேரில் கொல்லப்பட்டார்கள்? இவ்வாறான கேள்விகளுக்கு நாங்கள் பதில் தேட வேண்டியிருக்கின்றது.”

இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா.

இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் உள்ளதாவது:-

“2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற கையோடு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அதிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அவர்களது உறவுகளால் நேரடியாக இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்கள். மேற்படி நபர்கள் பாதுகாப்புத் தரப்பினரிடம் கையளிக்கப்பட்டமைக்கு சாட்சிகள் இருக்கின்றன.

2015ஆம் ஆண்டில் மகிந்த அரசு தோற்கடிக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் நல்லாட்சி அரசு உருவாக்கப்பட்டபோது அப்போதைய அரசில் நீதி அமைச்சராக இருந்த விஜயதாஸ ராஜபக்சவே இப்போதும் நீதி அமைச்சராக இருக்கின்றார். அப்படியெனில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் இருந்தார்களா? நல்லாட்சி அரசிடம் பாரம் கொடுக்கப்பட்டார்களா? இல்லையா? என்ற விடயத்தை அப்போது நீதி அமைச்சராகயிருந்த விஜயதாஸ ராஜபக்ச அறிந்திருக்கவில்லையா? உள்ளிட்ட கேள்விகளை நீதி அமைச்சரிடம் கேட்க வேண்டியிருக்கின்றது.

2022ஆம் ஆண்டு யாரும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே இரண்டு லட்சம் ரூபா இழப்பீட்டைப் பெற்றுக் கொண்டு இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர குறிப்பிட்ட தரப்பினர் முன்வர வேண்டும் என்று விஜயதாஸ தற்போது அறிவித்துள்ளார். ஆனால், 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசு காலத்தில் நீதியமைச்சராகயிருந்த இவர், அக்காலத்தில் இப்படியொரு கூற்றை முன்வைக்க முடியாமல் போனதென்றால் அக்காலத்தில் பாதுகாப்புத்தரப்பிடம் கையளிக்கப்பட்டவர்கள் உயிருடன் இருந்தார்களா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இப்போது துணிந்து அவர் வெளிப்படுத்தியிருக்கும் கூற்று யாரும் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று இறுதிசெய்வதாகவே இருக்கின்றது.

எனவேதான் இது தொடர்பில் நீதி அமைச்சரை நேரடியாகக் கேள்விக்குட்படுத்த வேண்டியிருக்கின்றது.

தமிழர்களுக்கு இப்போதுள்ள பிரச்சினை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் திரும்பி வரமாட்டார்கள்; எனவே இழப்பீட்டைப் பெற்றுக்கொண்டு அமைதியாக இருத்தல் பற்றியதல்ல. அது நீதி பற்றியதும் பொறுப்புக்கூறல் பற்றியதுமாகும்.

எம்மால் கையளிக்கப்பட்ட நபர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் கொல்லப்பட்டார்களா? அப்படியென்றால் யாரால் கொல்லப்பட்டார்கள்? யாருடைய உத்தரவின் பேரில் கொல்லப்பட்டார்கள்? இவ்வாறான கேள்விகளுக்கு நாங்கள் பதில்தேட வேண்டியிருக்கின்றது.

நீதியின் கட்டமைப்பைச் சிதைத்து ஆயுதவழி தீர்வை இராணுவமுறையில் அமுல்படுத்திய நபர்களுக்கு எதிராகச் சட்டம் என்னவிதமான நடவடிக்கையை மேற்கொள்ளப்போகின்றது?

இத்தகைய கேள்விகளுக்கு இந்தச் செயற்பாட்டுக்கு பதில் அளிக்கப் பொறுப்புவாய்ந்த நபர் எத்தகைய பதிலை அளிக்கப் போகின்றார் என்பதில்தான் தொலைந்துபோன தமது உறவுகளுக்காகத் தொடர் போராட்டத்தில் ஈடுபடுகின்ற மக்கள் தமது கவனத்தைக் குவித்து வைத்துள்ளார்கள்.

இவர்களின் இலக்கு இழப்பீடு பற்றியதல்ல. பொறுப்பான பதில் பற்றியது என்பதை நீதியமைச்சர் விளங்கிக்கொள்ள வேண்டும். காலம் தாழ்த்தியேனும் அந்தப் பதிலை பொறுப்புடன் வழங்க நீதி அமைச்சர் தயாராக இருக்கின்றாரா?

தமிழர் அரசியல் தரப்பு கைக்கொள்ளும் நீண்ட மௌனம் இந்த விடயத்தில் எப்போது வெளிப்படையாகக் கலையும் என்ற கேள்வியுடன் அந்த மௌனத்துக்குப் பின்னால் தொக்கி நிற்கும் தமிழ்த் தேசியத்தை நீர்த்துப் போகச் செய்யும் நபர்கள் குறித்தும் இனித் தமிழ் மக்கள் அவதானங்கொள்ள வேண்டிய சூழல் உருவாகி இருக்கின்றது.

எனவே, இழப்பீடு பற்றிப் பேசாது நீதியின் மடியில் தக்க பதிலைச் சமர்ப்பிக்குமாறு எல்லாவிதமான எதிர்க்கரங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவோம்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.