தம்பிலுவில் மாணவன் கிசோந்த்தின் மரணம் மன ரணத்தை ஏற்படுத்துகின்றது!

அம்பாறை, தம்பிலுவில் வித்தியாலய மாணவன் சிவபாலன் கிசோந்த் மரணம் மன ரணத்தை ஏற்படுத்துகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“கிழக்கு மாகாணத்திலுள் அம்பாறை மாவட்டப் பாடசாலைகளில் ஒன்றான தம்பிலுவில் வித்தியாலய மாணவன் சிவபாலன் கிசோந்த் சக மாணவனால் தாக்கப்பட்டு மரணமடைந்துள்ளான். இம் மாணவன் தரம் 8 இல் கல்வி பயிலும் 13 வயதுடைய சிறுவனாவான். இம்மரணம் ஒவ்வொருவரது மனதையும் ரணமாக்கும் செயலாக அமைந்துள்ளது.

பள்ளிப் பராயம், மாணவ பராயம் என்பது மகிழ்ச்சிக்குரியதாகும். அக்காலப் பதிவுகள் என்பது மறக்க முடியாத நினைவுகளாகும். ஆனால், சிவபாலன் கிசோந்த்தின் மரணம் என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத கறைபடிந்த நிகழ்வாக அமைந்து விட்டது.

தாக்கிய மாணவனும் காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான் எனத் தகவல்கள் கூறுகின்றன. என்ன நடந்தது? எப்படி நடந்தது? தடுக்க எவரும் இருக்கவில்லையா? மாணவன் மாணவனைத் தாக்கியதால் மரணம் எப்படி ஏற்பட்டது? இறந்த மாணவன் ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டவனா? என்று பல கேள்விகள் எழுகின்றன.

எது எப்படியாக இருந்தாலும் இந்தச் சம்பவம் கல்விச் சமூகம் மத்தியில் ஆழ்ந்த துரயத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலைகளில் வழிகாட்டல் ஆலோகைகளுக்கு என்றே ஆசிரிய நியமனங்கள் செய்யப்படுகின்றன. மாணவர்களை வழிப்படுத்துவதற்கான உளவியல் கல்வி, வழிகாட்டல் ஆலோசனைக் கல்வி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்றன. மாணவ மையக் கல்வி தொடர்பான செயலமர்வுகள் என்று பல செய்யப்படுகின்றன. இருந்தும் இப்படியான மாணவ வன்முறை மூலமாக சக மாணவன் பாட சாலையில் மரணித்துள்ளான்.

மாணவன் ஒருவனின் ஆக்ரோசம் என்னும் மனவெழுச்சி எவ்வளவு தூரம் ஆபத்தாக மாறியுள்ளது என்பதை ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது.

ஆசிரியர்களின் வழிகாட்டல் ஆலோசனைச் செயற்பாடுகள் வலுவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் கோடிட்டுக் காட்டுகின்றது.

மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலைச் சமரசம் செய்வதற்குச் சக மாணவர்கள் இல்லாமல் போனதும் துரதிஷ்டமாகவுள்ளது.

இதில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது. மாணவர்களை ஆற்றுப்படுத்துவதற்கு விசேட மேலைத்திட்டங்கள் அவசியமாகவுள்ளன.

மாணவர்களை மையமாகக் கொண்டு போதைப்பொருட்கள் வியாபாரமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே, விளையும் பயிர்களைப் பாதுகாப்பதற்குப் பெற்றோர்கள், பாதுகாவலர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள், மதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் அதிகூடிய கவனம் எடுக்க வேண்டியுள்ளது. இல்லையென்றால் எதிர்காலச் சந்ததியினர் தவறான பாதைகளில் சென்று விடுவார்கள்.

இனவாதத்தால், ஊழல் மோசடிகளால் நாடு சிதைக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளும் வன்மங்களால், போதைகளால் சிதைக்கப்பட்டால் எதிர்காலம் சூனியமாகிவிடும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.