இலங்கையில் சீனாவின் ஆதிக்கமா? அமைச்சர் கெஹலிய பதில்.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கமா? அமைச்சர் கெஹலிய பதில்

இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு ராஜபக்ச அரசு பதிலளித்துள்ளது.

“இலங்கைக்குச் சாதகமான வர்த்தக, அபிவிருத்தி கொள்கையுடன் இணங்கும் நாடுகளுடன் சேர்ந்து செயற்படுவதற்கே நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்கமையவே சீனாவுக்கு முன்னுரிமை கொடுக்கின்றோம்” என்று ராஜ்பக்ச அரசின் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

“நாட்டின் அபிவிருத்தித்  திட்டங்களில் இந்தியாவால் நிராகரிக்கப்பட்ட திட்டங்களை சீனா முன்வந்து செய்கின்றது. இதனால் சீனாவின் பொருளாதாரக் கொள்கையுடன் நாம் பயணிப்பதே எமக்குப் பயனுள்ளதாக இருக்கும்” என்றும் அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை மிகவும் தெளிவானது.எந்தவொரு நாட்டுடனும் முரண்படும் கொள்கையில் செயற்பட நாம் தயாராக இல்லை. சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இலங்கையுடன் நெருக்கமான நட்புறவைக் கொண்டுள்ளபோதும் வர்த்தக, அபிவிருத்தித் திட்டங்களில் எமக்குச் சாதகமான நாடுகளுடன் நாம் இணைந்து பயணிக்கின்றோம். சீனாவுக்கு முன்னுரிமை கொடுப்பதாக சில விமர்சனங்கள் எழுந்தாலும் கூட அதில் உண்மையில்லை.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்து, தெற்கின் கடல் ஆதிக்கத்தைப் பலப்படுத்த வேண்டும் என இலங்கை தீர்மானித்தபோது, முதலில் இந்தியாவுடனேயே பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், இந்திய அரசு  இதற்கு இணக்கம் தெரிவிக்காததால், அவர்களுக்கு அதன் அவசியம் இருக்கவில்லை என்பது புரிந்துகொள்ளப்பட்டது. அதன்பின்னரே அம்பாந்தோட்டை அபிவிருத்தி வேலைத்திட்டத்தைச் சீனா கையில் எடுத்தது.

அண்மையில் இலங்கை வந்த சீன உயர்மட்டக் குழுவொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச ஆகியோருடன் விசேட கலந்துரையாடல்களை நடத்தியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார விடயங்கள் தொடர்பாக இணக்கப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.