கனடாவில் தமிழின அழிப்பு நினைவகம்: நாமல் எம்.பி. போர்க்கொடி!

“கனடா ஒரு தமிழினப் படுகொலை நினைவுச்சின்னத்தைத் நிர்மாணித்துள்ளமை கவலைக்குரியது. அமைதி மற்றும் ஒற்றுமையை நோக்கிச் செயற்படுவதற்குப் பதிலாக, இந்தக் குழுக்கள் தங்கள் சொந்த நலன்களுக்காகப் பிரிவினையைத் தூண்டிவிடுகின்றன. இந்தப் போக்கு தொடர்ந்தால், உண்மையான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் கனடாவின் நம்பகத்தன்மையை அது குறைமதிப்புக்கு உட்படுத்தக்கூடும். இந்தச் செயல்முறையில் கனடா ஒரு தனிப்பட்ட நலன்களைக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

“இலங்கை அரசாங்கம் கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து கடும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். ஒரு சட்டபூர்வமான போரின் பின்னணியில் ஒரு தவறான இனப்படுகொலைக் கதையை ஊக்குவிப்பது வரலாற்றைத் திரிபுபடுத்துவது மட்டுமல்லாமல், இலங்கையில் நல்லிணக்க செயல்முறைக்குக் கடுமையான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும்.” – என்றும் நாமல் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.

கடனாவில் பிரம்டன் நகரில் சிங்கௌசி பொதுப்பூங்காவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி நாமல் ராஜபக்ஷ எம்.பி. தனது உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்தப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“இலங்கை இராணுவம் , விடுதலைப்புலிப் பயங்கரவாதத்துக்கு எதிராக முன்னெடுத்த மோதலில் எந்த இனப்படுகொலையும் சர்வதேச சட்டத்துக்கமைய நிரூபிக்கப்படவில்லை அல்லது நிரூபிக்கப்பட முடியாத நிலையில், கனடா ஒரு தமிழினப் படுகொலை நினைவுச் சின்னத்தை நிர்மாணித்துள்ளமை கவலைக்குரியது.

தமிழினப் படுகொலை நினைவுச் சின்னம் என்று அழைக்கப்படுவது, கனேடிய அரசால் அரசியல் ரீதியாக இயக்கப்படும் ஒரு நடவடிக்கையாகத் தெரிகின்றது. இது நீண்ட காலமாகத் தமிழ் புலம்பெயர்ந்தோருக்குள் உள்ள சில பிரிவுகளால் முன்னெக்கப்படுகின்றது. அமைதி மற்றும் ஒற்றுமையை நோக்கிச் செயற்படுவதற்குப் பதிலாக, இந்தக் குழுக்கள் தங்கள் சொந்த நலன்களுக்காகப் பிரிவினையைத் தூண்டிவிடுகின்றன.

1975 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மேயர் ஆல்ஃபிரட் துரையப்பாவைக் கொன்றதன் மூலம் வன்முறைச் செயற்பாடுகளைத் தொடங்கிய விடுதலைப்புலிகள், ஏராளமான கொடூரமான செயல்களைச் செய்தனர். இந்தப் பயங்கரவாதக் குழு ஆயிரக்கணக்கான தமிழ்ச் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்து, அவர்களை அவர்களது குடும்பங்களிலிருந்து பிரித்து, பெரும் துன்பத்தை ஏற்படுத்தியது. பல தசாப்த கால வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சட்டபூர்வமான இராணுவ நடவடிக்கையில் இலங்கை ஆயுதப் படைகள் விடுதலைப் புலிகளை ஒழித்தன.

விடுதலைப் புலிகள் மற்றும் காலிஸ்தான் போராளிகள் போன்ற பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குழுக்களை ஆதரித்த கனடாவின் வரலாறு, உலகளாவிய பயங்கரவாதம் குறித்த அதன் நிலைப்பாடு குறித்து கேள்விகளை எழுப்புகின்றது. இந்தப் போக்கு தொடர்ந்தால், உண்மையான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் கனடாவின் நம்பகத்தன்மையை அது குறைமதிப்புக்கு உட்படுத்தக்கூடும். இந்தச் செயல்முறையில் கனடா ஒரு தனிப்பட்ட நலன்களைக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.

இலங்கை அரசு கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்துக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். ஒரு சட்டபூர்வமான போரின் பின்னணியில் ஒரு தவறான இனப்படுகொலைக் கதையை ஊக்குவிப்பது வரலாற்றைத் திரிபுபடுத்துவது மட்டுமல்லாமல், இலங்கையில் நல்லிணக்க செயல்முறைக்குக் கடுமையான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும்.

இந்தப் பிரச்சினையில் இலங்கை அரசு தீர்க்கமாகச் செயற்படத் தவறுமாயின் அது ஆயுதப்படைகள், நாட்டின் இறையாண்மை மற்றும் மக்களுக்கு ஒரு அவமானமாக அமையும். இலங்கையின் தேசிய நலன்களைப் பாதிக்கும் முக்கியமான விடயங்களைத் திறம்படக் கையாள அரசின் இயலாமையையும் இது எடுத்துக்காட்டுகின்றது.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.